பக்கம் எண் :

200தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

ஆய்ந்து முறை செய்யப்பட்டது. அக் குடிகளுக்கு வேறு நிலங்கள்
அளிக்கப்பட்டனவா, தம்மிடமிருந்து விலக்கப்பட்ட நிலங்கட்கு இழப்பீடு
அளிக்கப்பெற்றனரா என்ற ஐய வினாக்கட்கு விளக்கங் காண முடியவில்லை.
தானம் பெற்ற அந்தணர்கள் தமிழ் நாட்டினராகத் தோன்றவில்லை; வட
இந்தியாவினின்றும் வரவழைக்கப்பட்ட, அன்றித் தாமாக வந்து குடியேற
இடமின்றி உழன்றுகொண்டிருந்த பிராமணர்கள் அவர்கள் என்று
அவர்களுடைய பெயர்கள் எடுத்துக்காட்டுகின்றன. இச் செப்பேட்டுச்
சாசனத்தின்கீழ்ப் பயன்பெற்ற சில பிராமணரின் பெயர்கள் கௌண்டின்ய
கோத்திரம் பிரவசன சூத்திரம் ருத்ரசர்மன், கௌண்டின்ய கோத்திரம்
ஆபஸ்தம்ப சூத்திரம் மாதவசர்மன், காசியப கோத்திரம் ஆபஸ்தம்ப
சூத்திரம் காளசர்மன், முத்கல கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரம் சன்னகாளி,
கௌசிக கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரம் கங்கபுரம், துரோண சிரேஷ்ட
புத்திரன் ரேவதி ஆகியவையாம். உதயேந்திரம் செப்பேடுகளில்
எழுதப்பட்டுள்ள மெய்க்கீர்த்திக் கவிதையை இயற்றியவன் மேதாவிகுலத்து
உதித்த பரமேசுவர கவி என்பவனாவான்.

     இரண்டாம் நந்திவர்மன் கால் சாய்ந்தது. அவனுக்குப்பின் அவன் மகன்
தந்திவர்மன் மணிமுடி சூட்டிக்கொண்டான் (கி.பி. 796-846). நந்திவர்மன்
இறந்த பிறகு பல்லவ வரலாற்றில் ஒரு திருப்பம் காணப்படுகின்றது. வடக்கில்
இராஷ்டிரகூடரின் செல்வாக்கு உயர்ந்து வந்து கொண்டிருந்தது. பல்லவர்க்கு
அவர்களுடன் நல்லுறவு கிடையாது. தெற்கே விசயாலய சோழனின் பரம்பரை
தொடங்கிவிட்டது. பல்லவ அரசின் பண்டைய புகழ் ஒளி மங்கலாயிற்று.
உள்நாட்டுக் கலகங்களும், சூழ்ச்சிகளும் மலிந்தன. நாட்டில் அமைதி
குலைந்துவிட்டது. பல்லவ அரசு ஆட்டங் கொடுக்கலாயிற்று. தந்திவர்மன்
இராஷ்டிரகூடரின் பிடியிலிருந்து ஓரளவு தப்பினானாயினும், சோழர்களுடன்
போரிட்டுத் தன் வலிமையை இழக்கும் அளவுக்கு அவனுடைய ஆற்றல்
குன்றிவிட்டது. தந்திவர்மனின் மனைவி கதம்ப குலத்தவளான அக்களநிம்மடி
என்பவள் வயிற்றில் பிறந்தவன் மூன்றாம் நந்திவர்மன். தந்திவர்மனுக்குப்
பிறகு இவனே அரியணை ஏறினான் (கி.பி. 846-69).

     மூன்றாம் நந்திவர்ம பல்லவன் இராஷ்டிரகூட இளவரசி சங்கா
என்பவளை மணந்திருந்தான். இவள் வயிற்றில் பிறந்தவன்தான் அடுத்த
பல்லவ மன்னனாக இருந்த நிருபதுங்கன் என்பவன். நந்திவர்மனின் மற்றொரு
மனைவியான கண்டன் மாறம்பாவை என்பாள் வயிற்றில் பிறந்தவன்
அபராஜித விக்கிரமவர்மன்.