நந்திவர்மன் சிறந்த போர்த்திறம் படைத்தவன். நந்தி போத்தரசன், நந்தி விக்கிரமவர்மன், விசயநந்தி விக்கிரமவர்மன் என்று பல பெயர்கள் இவனுக்கு உண்டு. நந்திக் கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப் பாராட்டப்படுபவன் இவனே யாவான். தெள்ளாற்றில் மட்டுமன்றி, வெள்ளாறு, கடம்பூர், வெறியலூர், தொண்டி, பழையாறு ஆகிய இடங்களில் தன் பகைவரைப் பொருது வெற்றிகண்டான் இவன் என நந்திக் கலம்பகம் கூறுகின்றது. கொங்கு நாடும், சோழ நாடும் இவனுக்குத் தோற்று அடிபணிந்தனவாகையால் இவனுக்குக் ‘கொங்கன்’ என்றும் ‘சோணாடன்’ என்றும் விருதுகள் எய்தின. மூன்றாம் நந்திவர்மன் கி.பி. 862 ஆம் ஆண்டளவில் இரண்டாம் வரகுண பாண்டியனுக்குத் துணையாக இலங்கை மன்னன்மேல் போர் தொடுத்தான். இவனுக்குப் பக்கபலமாக நின்று அப்போரை நடத்திக் கொடுத்தவன் இளவரசன் நிருபதுங்கன் ஆவான். மூன்றாம் நந்திவர்மன் நந்திக் கலம்பகத்தில் அவனி நாராயணன் என்றும், ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன் என்றும், நுரை வெண்திரை நாற்கடற்கு ஒரு நாயகன் என்றும் பாராட்டப் பெறுகின்றான். மல்லையிலும் மயிலையிலும் துறைமுகங்கள் அமைந்திருந்தன. இப் பல்லவ மன்னன் கடல் கடந்து சென்று அயல்நாடுகளுடன் தொடர்புகொண்டிருந்தான் என்பது விளக்கமாகின்றது. மூன்றாம் நந்திவர்மனையடுத்து அவன் மூத்த மகன் நிருபதுங்கன் முடிசூட்டிக்கொண்டான். இவனுடன் பிறந்த தம்பியின் பெயர் கம்பவர்மன் என்பது. இவனுடைய மாற்றாந்தாய் வயிற்றுப் பிறந்த அபராஜிதன் நிருபதுங்கன்மேல் அரசுரிமைப் போர் தொடுத்து அவன்மேல் திருப்புறம்பயம் என்ற இடத்தில் வெற்றி கண்டான் (சு. கி. பி. 895). இப் போரில் இவனுக்குக் கங்கரும் சோழரும் துணை நின்றனர். இப் போர் முடிவுற்ற பிறகு இருபத்தாறு ஆண்டுகள் வரையில் நிருபதுங்கனைப் பற்றிய செய்தியே கிடைக்கவில்லை. அவன் தன் நாற்பத்தொன்பதாம் ஆட்சி யாண்டில் நாட்டிய கல்வெட்டு ஒன்று திருத்தணிகைக்கு அண்மையிலுள்ள மடவளம் என்னும் ஊரில் காணப்படுகின்றது. அபராஜிதனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் நிருபதுங்கன் தான் ஒதுங்கியிருந்த இடத்திலிருந்து மீண்டும் வெளிப்பட்டான் என்று இதனால் அறிகின்றோம். அபராஜிதனின் ஆட்சி பதினெட்டு ஆண்டுகள் நீடித்தன (கி. பி. 895-913). அவனுடைய செல்வாக்குத் தொண்டைமண்டலத்தின் தென்பகுதி வரையிற்றான் எட்டி இருந்தது. தொண்டைமண்டலம் சோழரின் பிடியில் சிக்குண்டிருந்தது. இக் காலத்தில் நாட்டப்பட்ட ஆதித்த |