சோழனின் கல்வெட்டுகள் தொண்டை மண்டலத்தில் பல இடங்களிலும் காணப்படுகின்றன. வாணகோவரையர்கள் ஆதித்தனுக்குத் திறை செலுத்தி வந்தனர் என்ற செய்தியைத் திருவொற்றியூர்க் கல்வெட்டுகள் இரண்டு தெரிவிக்கின்றன. அபராஜிதனை ஆதித்த சோழன் போரில் கொன்றான் (கி. பி. 913) என்ற செய்தியை வீரராசேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு ஒன்றினால் அறிகின்றோம். இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் இப் போரைக் குறிப்பிடுகின்றன. அபராஜிதன் தன் இறுதியாண்டுகளில் அடைந்த இன்னல்களைப் பயன்படுத்திக்கொண்டு நிருபதுங்கன் தன் அரசியற் செல்வாக்கை வளர்த்துக்கொண்டான். ஏற்கெனவே முதுமையினால் வாடிய அபராஜிதன் நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கவில்லை. இம் மன்னனுக்குப் பிருதிவி மாணிக்கம், வீரமகாதேவியார் என இரு மனைவியர் இருந்தனர். முன்னவள் பேரால் பிருதிவி மாணிக்கம்படி என்றொரு முகத்தலளவை வழங்கி வந்தது. உக்கல் என்ற ஊரில் எழுப்பப்பட்ட திருமால் கோயில் ஒன்று புவன மாணிக்க விஷ்ணு கிரகம் என்று இவ்வரசியின் பேரால் விளங்குகின்றது. வீரமகாதேவியார் இரணிய கருப்பம், துலாபாரம் என்ற சடங்குகளைச் செய்து கொண்டு கோயிலுக்குத் துலாபாரம் பொன்னில் ஐம்பது கழஞ்சு எடுத்து வழங்கினாள் என்று திருக்கோடிக்காக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. நிருபதுங்கனுக்குப் பிறகு பட்டமேற்ற கம்பவர்மனைப் பற்றிப் போதுமான விளக்கம் கிடைக்கவில்லை. தன் உடன்பிறந்தாராகிய நிருபதுங்கனுடனும், அபராஜிதனுடனும் இவன் சில காலம் இணைந்து ஆட்சிப் பொறுப்புகளை ஏற்றிருந்தான் என்று ஊகிக்கலாம். பிறகு பல்லவ அரசானது சிறுசிறு தலைவர்களின் கைக்கு மாறி இறுதியில் கி.பி. 949-ல் தன்னிலை தடுமாறித் திறன் குன்றி மறைந்து போயிற்று. அவ் வாண்டிற்றான் இராஷ்டிரகூட மன்னன் படையெடுத்து வந்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர் காலத்திய பெருமை தமிழகத்து வரலாற்றில் சுடர்விட்டு ஒளிர்கின்றது. தமிழரின் நாகரிகத்துக்கும், பண்பாட்டுக்கும் புறம்பானவர்களான பல்லவர்கள் தமிழகத்துக்கு வந்த பிறகு நாளடைவில் தாமும் தமிழராகவே மாறிவிட்டனர். ஆதியில் வடமொழியைத் தம் ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தனரேனும், நாளடைவில் அவர்கள் தமிழையும் தம் ஆட்சி மொழியாகக் கொண்டனர். அவர்கள் காலத்தில் பல வடமொழி |