பக்கம் எண் :

தமிழகத்தின் இயற்கை அமைப்புகள் 25

அஃது எவ்வளவு தொலைவு பரவி இருந்தது. இறுதியாக எப்போது மறைந்து
போயிற்று என்பது இன்னும் புவியியல் புதிர்களில் ஒன்றாகவே உள்ளது.

     சங்க காலத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் பரவியிருந்த
தமிழகம் சங்க காலத்தில் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு
நல்உலக’மாகச் சுருங்கிவிட்டது. ‘தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா
வெல்லை’7 என்றும், ‘தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை’8
என்றும், சங்க நூல்கள் தமிழகத்தின் எல்லையை வகுத்துக் காட்டியுள்ளன.
வேங்கடத்துக்கு வடக்கில் வேற்றுமொழி (தெலுங்கு) வழங்கி வந்தது.9
வேங்கடத்துக்குத் தென்பால் ‘தேன் தூங்கு உயர்வரை நன்னாடு’ ஒன்றைப்
‘புல்லி’ என்ற மன்னன் ஆண்டு வந்தான்.10 கட்டி என்ற குறுநில மன்னனின்
நாட்டுக்கு வடக்கிலும் வடுகர் வாழ்ந்து வந்தனர்.11 பண்டை தமிழகத்தில்
இப்போதைய கேரளமும் சேர்ந்திருந்தது. ஆனால், நன்னூல் என்னும் தமிழ்
இலக்கணமானது ‘குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான்
கெல்லையின்’12 என்று தமிழகத்துக்கு எல்லை வகுக்கின்றது. இவ்விலக்கண
நூல் எழுந்தது 12ஆம் நூற்றாண்டில் ; ஆகையால், இந் நூலாசிரியரான
பவணந்தி முனிவர் காலத்தில் தமிழகத்தின் மேலையெல்லை குடகு வரையில்
சுருங்கிவிட்டது எனத் தெரிகின்றது. தமிழகத்தினின்றும் பிரிந்து நின்ற
சேரநாட்டில் தமிழ்மொழியானது உருத்திரிந்து கொடுந்தமிழாக மாறிற்று.

     யாழ்ப்பாணம் என்று வழங்கும் வட இலங்கை தமிழகத்துடன்
சேர்ந்திருந்ததா என்று உறுதியாகக் கூறுவதற்கில்லை. எனினும்,
யாழ்ப்பாணத்திலும் தமிழகத்திலும் வழங்கிய மொழியும், பண்பாடும் திரிபின்றி
ஒரேவிதமாக இருந்துவந்தன என்று கருதவேண்டியுள்ளது. ஈழத்துப்
பூதன்தேவனார் என்பவர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவர் என்று அவருடைய
பெயரே அறிவிக்கின்றது. அவர் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும்,13
குறுந்தொகையிலும்,14 நற்றிணையிலும்15 சேர்க்கப்பட்டுள்ளன.

     7. புறம்-17 ; 1-2. 8. மதுரைக் : 70-71. 9. அகம். 211 : 7-8.
     10. அகம். 393 : 18-20. 11. குறுந்-11 : 5-6. 12. நன். சிறப். பாயி.
     13. அகம்.88, 231, 307. 14. குறுந், 189, 343, 360. 15. நற்றி-366.