பக்கம் எண் :

26தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     தமிழகம் பன்னூறு ஆண்டுகள் பாண்டி நாடு, சோழ நாடு, சேர நாடு,
கொங்கு நாடு முதலிய அரசியற் பிரிவுகளுக்குட் பட்டுக் கிடந்ததற்கு அதன்
இயற்கையமைப்புதான் காரணம் என்பது தெளிவு. மேற்குத் தொடர்
மலைகளும், கிழக்குத் தொடர் மலைகளும் இரு கடற்கரையோரங்களிலும்
அமைந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஒன்றாய் இணைகின்றன.
இவ்விரு தொடர்கட்குமிடையே சமவெளி ஒன்று அமைந்துள்ளது ; மேற்குத்
தொடருக்கு மேற்கிலும் கிழக்குத் தொடருக்குக் கீழ்ப்புறத்திலும் சமவெளிகள்
உள்ளன. நீலகிரிக்குத் தெற்கிலும் சமவெளிகள் உள்ளன. இவையேயன்றிப் பல
குன்று களையடுத்தும் சமவெளிகள் அமைந்துள்ளன. இச் சமவெளிகளில்
வாழ்ந்த மக்கள் ஆங்காங்குத் தனித்தனி நாட்டு மக்களாகவே வாழ்ந்து
வந்தனர். மிகப் பெரிய நாடுகளான பாண்டி நாடு, சோழ நாடு, சேர நாடு,
கொங்கு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகள் இவ்வாறு அமைந்தவையே.
இவையே யன்றி அதியமான்களும், ஆய்களும், மலையமான்களும்,
வேளிர்களும் ஆண்டுவந்த குறுநாடுகள் பலவும் தனியரசுகளாகவே இயங்கி
வந்தன. காட்டு நாடு,16 பாரி நாடு,17 கோனாடு,18 முக்காவல் நாடு,19 வேங்கட
நாடு20 முதலிய நாடுகளும் புறநானூற்றில் குறிப்பிடப்படுகின்றன. பழந்தமிழர்
ஒன்றுபட்டு வாழாமல் தனித்தனி அரசியற் சமூகங்களாகப் பிரிந்து வாழ்ந்து
வந்ததற்கு நாட்டின் இயற்கை அமைப்பே காரணம் என்றால் மிகையாகாது.
அவ்வப்போது ஒரு கரிகாலனோ, நெடுஞ்செழியனோ, அன்றி இராசராசனோ,
இராசேந்திரனோ தோன்றி அண்டை அயல்நாடுகளை வென்று தனியரசு
செலுத்தி வந்துள்ளனர் ; தமிழகத்திலும் ஒருமைப்பாடு காணப்பட்டது.
ஆனால், பொதுவாக மக்கள் தமக்குள்ளேயே பொருமலிலும் பூசலிலும்
ஈடுபட்டு, ஒற்றுமை குலைந்து அயலாருக்கு இடங் கொடுக்க வேண்டிய
நிலைமை அடிக்கடி ஏற்பட்டுள்ளது. மலைகளும் குன்றுகளும் நாட்டில் பல
இடங்களில் குறுக்கிட்டதால் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் மருதம்,
முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலை என்று நிலப் பாகுபாடுகள் ஏற்பட்டு
அவற்றிற்கேற்ப மக்களின் ஒழுக்கமும், பண்பாடுகளும், வாழ்க்கை முறைகளும்
அமையலாயின.

     16. புறம்-150. 17. புறம் -122. 18. புறம்-61.
     19. புறம்-80. 20. புறம்-389.