பக்கம் எண் :

27

                3. வரலாற்றுக் காலத்துக்கு
                    முந்திய தமிழகம்

     உலகில் முதன்முதல் மக்களினம் தோன்றியது தென்னிந்தியா விற்றான்
 என்று சில புவியியல், மானிடவியல் வல்லுநர் கருதுகின்றனர். இவர்களுடைய
கருத்துக்குச் சார்பாகப் போதிய சான்றுகள் இன்னும் கிடைத்தில. எனினும்,
இந்தியத் துணைக் கண்டத்தைப் பற்றியவரையில் தென்னிந்தியாவிற்றான்
முதன் முதல் மக்களினம் தோன்றிற்று என்பதில் ஐயமேதுமில்லை.

     பலகோடி யாண்டுகட்கு முன்னர் உண்டான மிகப் பழைய கற்பாறைப்
படிவுகள் தென்னிந்தியாவிற்றான் காணப்படுகின்றன. இப் பகுதியில் காடுகளும்
மலைகளும் செறிந்து கிடக்கின்றன. எனவே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே இங்கும் மக்கள் தோன்றி வாழ்வதற்கு நல்வாய்ப்புகள் உண்டு.
தொலை தூரம் தேடியலையாமலேயே அவர்கள் இங்குத் தமக்கு வேண்டிய
உணவைப் பெறலாம். இக் காடுகளில் காய்களும், கனிகளும், கொட்டைகளும்,
கிழங்குகளும் கிடைத்தன. ஆதிமனிதன் ஆங்காங்குக் கிடைத்த உணவுப்
பண்டங்களைப் பொறுக்கித் தின்று வயிறு பிழைத்தான். பிறகுதான் அவன்
வேட்டையாடக் கற்றுக்கொண்டான். எனவே, மனிதன் வேட்டையாடிப்
பிழைக்கக் கற்றுக்கொண்ட ஒரு காலத்துக்கும் முற்பட்ட காலத்தில் ஆதி
மனிதன் தென்னிந்தியாவில் தோன்றி வாழ்க்கையை நடத்திவந்தான் என்று
கொள்ளலாம்.

     விந்தியமலைத் தொடருக்கு வடக்கே பரந்து கிடக்கும் கங்கையாற்று
வெளியும், இமயமலைத் தொடரும் முன்னொரு காலத்தில் கடலுக்குள் மூழ்கிக்
கிடந்தன. இமயமலைத் தொடரில் ஆங்காங்குக் கடல்வாழ் உயிர்களின்
எலும்புகள் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றாகும். வட இந்தியா
கடலுக்குள் மூழ்கிக் கிடந்த அக் காலத்தில் தென்னிந்தியாவானது காடும்
மலையும் செறிந்து, மக்களினமும் ஏனைய உயிர் வகைகளும் வாழ்வதற்கு
ஏற்ற இடமாக விளங்கிற்று என்பதனை இதனால் அறிகின்றோம்.
கங்கைவெளியும் இமயமும் கடலினின்றும்