மேலெறியப் பெற்ற புவியியல் நிகழ்ச்சி இற்றைக்கு ஐந்து கோடி யாண்டுகட்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும் என்று புவியியலார் கருதுவர். தென்னிந்தியாவுக்குத் தெற்கில் அமைந்திருந்த லெமூரியாவிற்றான் முதன்முதல் மக்களினம் தோன்றிற்று எனவும், அவ்வினமே தமிழ்நாட்டின் ஆதிகுடிகள் எனவும் லெமூரியக் கொள்கையினர் கருதுவர். லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்து வந்த மக்களின் வழிவந்தவர்கள் இப்போது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களிடம் இனவொற்றுமை, மக்கள் உடல்கூறு ஒற்றுமை, மொழி அமைப்பு ஒற்றுமை ஆகியவை பல காணப்படுகின்றன. நியூஜிலாந்தில் வாழும் ஆதிகுடிகளான மேவோரி மக்களும், இத் தீவைச் சுற்றிலும் சிதறுண்டு கிடக்கும் சிறுசிறு தீவுகளில் வாழும் மக்களும் பேசும் மொழிகளுக்கும் தமிழுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இஃதன்றி, தென்னிந்திய மக்களுள் சில குலத்தினரும் மரபினரும் போற்றும் வழிபாட்டுச் சின்னங்களையும் அவர்களுள் கள்ளர்கள் என்பார் எய்யும் ‘பூமராங்’ என்னும் மீண்டுவரும் வேட்டைக் கத்தியையும் இந்தோனேசீயாவிலும் பாலினீசியாவிலும் வாழும் ஆதிகுடிகளிடம் காணலாம். மேலும் போர்னியா தீவின் ஆதி குடிமக்களான டையாக்குகளும், ஆனைமலையின் பழங்குடிகளான காடர்களும் மரமேறும் முறை ஒரேவிதமாக உள்ளது. இக் காடர்களும், தென்னிந்திய ஆதிகுடிகளுள் மற்றோர் இனத்தவரான மலை வேடர்களும் தம் முன் பற்களைத் துணித்துக் கொள்ளும் வழக்கம் ஒன்று உண்டு. மலேசிய நாட்டினரான ஜு குன்களும் இப் பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். மற்றும் தென்னாப்பிரிக்க வாசிகளான நீக்குரோவர்களின் சாயை தென்னிந்திய ஆதிகுடிகள் சிலரிடம் தோற்றமளிக்கின்றது. பண்டைக் காலத்தில் இந் நீக்கிரோவர்களுக்கும், தென்னிந்தியருக்கும், தென்கிழக்கு ஆசியத் தீவினருக்குமிடையே தொடர்ந்த போக்குவரத்தும் இனக்கலப்பும் ஏற்பட்டிருக்கவேண்டும். லெமூரியாக் கண்டம் இருந்ததற்கும், அக்கண்டத்தில் வாழ்ந்த ஆதி மக்கள் வழி வந்தவர்களே தமிழர்கள் என்பதற்கும் மேலே கொடுத்த சான்றுகள் ஆதரவாகக் காட்டப்படுகின்றன. எனினும், தமிழ் மக்கள் லெமூரிய ஆதிகுடிகளின் நேர்வழி வந்தவர்தாமா என்ற ஐயப்பாடு நிகழாமல் இல்லை. இங்கு நாம் கருத்திற் கொள்ள வேண்டிய தொன்றுண்டு. ஐந்துகோடி யாண்டுகளுக்கு முன்பு, அதாவது, கங்கைவெளி யுயர்ந்து லெமூரியா மூழ்கிப் போம் போது உலகின்மேல் எங்கும் மனித இனமே தோன்றவில்லை. |