பக்கம் எண் :

வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தமிழகம் 29

அது தோன்றியதே சில நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான். எனவே,
ஐந்து கோடி யாண்டுகட்கு முன்பு லெமூரியர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதும்,
அவர்களே தமிழர்கட்கு முன்னோர்களாவார்கள் என்பதும் எவ்வாறு
பொருந்தும்?

     தமிழர் தமிழகத்திலேயே பிறந்த ஆதிகுடிகள் என்பது லெமூரியக்
கொள்கையினரின் முடிவு. இவர்கள் மேலும் ஒன்று கூறுவர். தமிழ் மக்களில்
சிலர் நாட்டைவிட்டு வெளியேறிப் படர்ந்து சென்று மத்தியதரைக்கடற்
பகுதியில் குடியேறிப் பின்பு பல பழம் நாகரிகங்களை வளர்த்தனர் என்றும்
இவர்கள் கூறுகின்றனர். இக் கொள்கைக்குப் பேராதரவு கொடுத்தவர்
பேராசிரியர் பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆவார்.

     தமிழர்கள் தமிழகத்தின் ஆதிகுடிகள் என்ற கொள்கைக்கு விஞ்ஞான
முறையிலான சான்றுகள் மிகுதியாக இன்னும் கிடைத்தில. பழங் கற்காலத்
தமிழன் எந்த மனித இனத்தைச் சார்ந்தவன் என்று ஊகித்தறிவதற்குச்
சான்றாக அக் காலத்திய மனித எலும்புக்கூடு ஒன்றும் இதுவரையில்
கிடைக்கவில்லை. புதைபொருள் ஆராய்ச்சித் துறையில் மேற்கொள்ளப்
பட்டுள்ள முயற்சிகளின் மூலம் தக்காணத்தில் வடுநகரிலும், ஜாவாவிலும்,
ஆப்பிரிக்காவிலும், மனித வடிவிலுள்ள எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.

     வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மக்களுடைய இன வேறுபாடுகள்,
நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி ஆராயும் போது சிறப்பாக நாம்
மூன்று துறைகளில் கருத்தூன்ற வேண்டும்.

    1, தமிழரின் உடல் தோற்றம்.

    2. புதைபொருள் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தும் பாண்ட வகைகள்,
      கருவிகள் ஆகியவற்றின் அமைப்பு. இத் துறைகளில் நம் கருத்தைச்
      செலுத்தி ஆதி தமிழரின் வரலாற்றுக் கூறுபாடுகளை நாம் ஆராய
      வேண்டும்.

    3, அவர்களுடைய மொழியும், மொழிப் பிரிவுகளும்.

     வரலாற்றுக்கு முற்பட்ட கால ஆராய்ச்சியில் மக்கள் இன வரலாற்றை
மூன்று பிரிவுகளாக வகுத்து அவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தொகுத்தல்
மரபு. பழங்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற் புதைவு காலம் என்பன
அவை.