இக் காலங்களில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் இன்ன இன்ன இனக் கலப்புடையவர்கள் என்று அறுதியிடுவது எளிதன்று. கொச்சியைச் சேர்ந்த காடர்களும் புலையர்களும், திருவிதாங்கூரைச் சேர்ந்த மலைப்பண்டாரங்களும், வயநாட்டுப் பணியர்களும், ஆந்திநாட்டுச் செஞ்சுக்களும், பழங்கற்கால மக்களின் வழிவந்தவர்கள் என்று இனவியலார் (Ethnologists) சிலர் கருதுகின்றனர். பழங்கற் காலத்தவர்களைப் போலவே அம் மக்கள் அனைவரும் உணவைப் பொறுக்கிச் சேமித்து உண்கின்றனர். பயிரிடவோ, வேட்டையாடவோ அவர்கள் இன்னும் பயிலவில்லை; அந்த அளவுக்கு அவர்களுடைய அறிவும், நாகரிகமும் வளரவில்லை; காடர், புலையர் ஆகிய இனத்து மக்களில் நீக்கிரோவரின் இரத்தக்கலப்பைக் காணக்கூடும். நீக்கிரோவர்களைப் போலவே இவர்களும் குள்ளர்கள் ; அவர்களைப் போலவே இவர்கட்கும் தலைமயிர் சுருட்டையாக உள்ளது. சென்னைக்கு அண்மையில் கிடைத்துள்ள பழங் கற்காலக் கருவிகள் தென்னாப்பிரிக்காவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நீக்கிரோ இனக் கூறுபாடுகள் தென்னிந்தியாவில் காணப்படுவதன் காரணத்தை ஒருவாறு ஊகித்தறியலாம். ஆதிகாலத்தில் தென்னிந்திய மக்களுக்கும் தென்னாப்பிரிக்க நீக்கிரோவர்களுக்குமிடையில் வாணிகத்தொடர்பு இருந்திருக்கக்கூடும். புயலில் சிக்கியோ, கரைதட்டியோ சிதையுண்ட கப்பல்களிலிருந்தும் உயிர் தப்பிய நீக்கிரோவர்கள் தென்னிந்தியாவில் கரையேறி நாட்டில் ஆங்காங்குக் குடியேறியிருக்கலாம். அன்றி, ஆப்பிரிக்க நீக்கிரோவர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து வந்து தென்னிந்தியாவில் குடியேற்றங்களை அமைத்திருக்கலாம். இவை வெற்று ஊகங்களேயன்றி இவற்றுக்குச் சான்றுகள் கிடையா. ஆனால், லெமூரியாக் கண்டத்தைச் சார்ந்தவர்தாம் தமிழர் என்னும் கருத்து மிகப் பொருத்தமாய் உள்ளது. புதிய கற்காலத்தில் கோலேரியர் என்ற இனத்தவர் இந்தியாவுக்குள் நுழைந்து பல பிரிவுகளாகப் பிரிந்து ஆங்காங்குக் குடியேறினர் என்றும், அவர்களுள் ஒரு பிரிவினர் ஒரிஸ்ஸாவிலும் ஆனைமலையிலும் குடியேறினர் என்றும் கூறுவர். இவர்கள் படு முரடர்கள் என்பர்; இவர்கள் வழிவந்தவர்கள் இன்றும் ஆனைமலையிலும் காணப்படுகின்றார்கள் ; ஒரிஸ்ஸா மலைகளில் இப்போது தழையாடை புனைந்து வாழும் ஆதி குடிகளும் இவ்வினத்தவர்களே. கோலேரியர்களிடம் ஆஸ்திரேலிய ஆதிகுடிகளின் இனக் கலப்புக் காணப்படுகின்றது. கோலேரியர் முண்டா என்ற ஒரு மொழியைப் பேசினர். கோலேரியர்கள் இந்தியாவுக்குள் எப்போது நுழைந்தார்கள், எப்படி |