பக்கம் எண் :

வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தமிழகம் 31

நுழைந்தார்கள் என்று விளங்கவில்லை. ஆசாம் மாநிலத்தில் வாழும்
காசிகளின் உடற்கூறுகளும் மலையாள மக்களின் உடற்கூறுகளும் சில
வகைகளில் ஒத்துள்ளன. காசிகளின் உடற்கூறுகளைப்போலவே கோலேரியரின்
உடற்கூறுகளும் காணப்படுகின்றன. ஆசாமில் கிடைத்துள்ள பெருங்கற்
புதைவுகளின் அமைப்பும் தென்னிந்தியப் பெருங்கற் புதைவுகளின் அமைப்பும்
ஒரே விதமாக உள்ளன. கோலேரியர்கள் இந்தியாவின் வடகிழக்குப்
பகுதியினின்றும் இடம்பெயர்ந்து தென்மேற்காகப் படர்ந்தனர் போலும். அன்றி
அவர்கள் மலையாள மக்களுடன் பண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்தனர்
என்றும் கொள்ளலாம். மத்தியப் பிரதேசம், வங்காளம் ஆகிய இடங்களில்
வாழும் ஆதிகுடிகள் பேசும் மொழிகள் சிலவற்றில் திராவிட மொழிகளின்
கூறுபாடுகள் கலந்துள்ளன என்பதில் ஐயமில்லை. எனவே, முன்னொரு
காலத்தில் கங்கைக்கரைகளிலும் திராவிட இனத்து மக்கள் பரவி வாழ்ந்து
வந்தனர் என்று கொள்ளுவதற்கு இடமுண்டு.1

     கோலேரியர் நாடோடிகள் அல்லர்; வேட்டையாடியே பிழைத்தவர்களும்
அல்லர். அவர்கள் கைதேர்ந்த உழவர்கள். ஆங்காங்கு குடியேற்றங்கள்
அமைத்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் விலங்குகளைக் கடவுளாக
வணங்கினர்; தென்புலத்தாரை வழிபட்டனர்; உயிர்நீத்தவர்கட்கும் பேய்கட்கும்
பூதங்கட்கும் உயிர்ப்பலி கொடுத்தனர். இறந்த பிறகும் உயிர்கட்கு வாழ்வு
உண்டு என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் தென்புலத்தாரை வழிபட்ட
காரணத்தைக் கொண்டு ஓரளவு ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்ந்தவர்கள்
என்று துணியலாம். அவர்கள் மேற்கொண்டுள்ள பழக்கவழக்கங்கள் பல
திராவிட மக்களின் வாழ்க்கை முறைகளிலும் அவர்கள் வழியே பிற்காலத்திய
இந்து சமூகத்திலும் இடம் பெற்றுள்ளன. ஆனைமுகத்து விநாயகக் கடவுளும்,
குரங்கு வடிவங் கொண்ட அனுமனும் ஆஸ்திரேலிய ஆதிகுடிகளின் விலங்கு
வழிப்பாட்டினின்றும் உருவானவர்கள் என்று சிலர் கருதுவர். இக் கருத்தை
மெய்பிக்கப் போதுமான சான்றுகள் இல. ஏனெனில், இக் கடவுளரின் வழிபாடு
இந்தியாவிற்றான் காணப்படுகிறதேயன்றி ஆஸ்திரேலிய ஆதிகுடிகளின்
வாழ்க்கையில் காணப்படவில்லை. கிடைத்தவற்றிலிருந்து இவர்கள்
முற்காலத்தில் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம்.

     புதிய கற்காலம் நிகழ்ந்தபோதே தமிழகத்துடன் தொடர்பு கொண்ட
மற்றுமோர் இனத்தினர் திராவிடர்கள். இவர்கள்

     1. Caldwell’s comparative Grammar, P. 37-Para-1.