தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்த ஆதிகுடிகள் என்று சிலர் கருதுகின்றனர். திராவிடர்கள் தமிழகத்தினின்றும் பரவிச் சென்று மத்திய தரைக் கடல் நாடுகளில் குடியேறினர் என்பது இவ் வாய்வாளரின் கொள்கையாகும். வேறு சிலர் இவர்கள் யாவரும் லெமூரியாவைச் சார்ந்தவர் என்பர். பண்டைய காலத்திய மத்தியதரைக் கடற்பகுதி மக்களுக்கும் திராவிடருக்குமிடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. திராவிடர்கள் மத்தியதரைக் கடல் வாழ்க்கையைக் கைவிட்டு வெளியேறி, இமயமலையின் வடமேற்குக் கணவாய்களின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்று சிலர் கருதுவர். இக் கருத்தை நிலைநாட்டப் பல சான்றுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. பலூசி ஸ்தானத்தில் வழங்கும் பிராஹு வி மொழிக்கும், திராவிட மொழிக்கட்கும் உள்ள இனவொற்றுமைகள் அச் சான்றுகளில் சிறந்தவையாம். ஆசியாமைனரைச் சேர்ந்த லிசியர்களும் மத்திய தரைக்கடல் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ‘த்ரிம்ளை’ (Trimmlai) எனவும் அழைக்கப்பட்டதாக இவர்களுடைய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இச் சொல்லின் ஒலி ‘திரமிளம்’, ‘தமிழ்’ என்னும் சொற்களின் ஒலியுடன் ஓரளவு இணக்கமுற்றதாகக் காணப்படுகின்றது. மேலும், பண்டைய சுமேரியர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலேயும் சில ஒற்றுமைகள் உண்டு. கடவுள் வழிபாட்டிலும், கோயில் அமைப்பிலும் இவர்களுடைய பழக்க வழக்கங்கள் இயைந்துள்ளன. மிட்டன்னிகள், எலாமைட்டுகள், காசைட்டுகள் போன்ற பண்டைய மேற்காசிய மக்களுடைய மொழிகளுக்கும் தமிழுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பைக் காணலாம். ஈரானின் பழங்குடி மக்களான கஸ்பியர்களின் தலையும், திராவிடர்களின் தலையும் வட்டவடிவமாக உள்ளன. இச் சான்றுகளைக் கொண்டு மத்திய தரைக் கடல் மக்கள் சிலர் ஈரான் வழியாக வெளியேறி, இந்தியாவின் வடமேற்குப் புறத்தில் நுழைந்து வந்து தென்னிந்தியாவில் குடியேறினர் என்று ஊகிக்க இடமுண்டு. இந்தியாவின் வடகிழக்கில் வாழ்ந்து வந்த ஆதிகுடிகளான காசிகளின் பெருங்கற் புதைவுகளுக்கும் தென்னிந்தியப் பெருங்கற் புதைவுகளுக்குமிடையே வேறுபாடுகள் உண்டு. காசிகளின் புதைகுழிகள் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை. ஆனால் தென்னிந்தியப் புதைவுகள் இரும்புக் காலத்தியவை. வடிவ அமைப்பிலும், கட்டடக் கூறுபாடுகளிலும் இவ்விரு புதைவுகளும் வேறுபடுகின்றன. ஆனால், மத்திய தரைக்கடல் மக்கள் அமைத்துக் கொண்டிருந்த புதைகுழிகளுக்கும் தென்னிந்தியக் குழிகளுக்குமிடையே பல இயையுகள் உண்டு. இங்கிலாந்து, போச்சுக்கல், |