பக்கம் எண் :

வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தமிழகம் 33

ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், கருங்கடலின் கீழ்க்கரை நாடுகள்,
வடஆப்பிரிக்கா, காக்கேசிய நாடுகள், பாலஸ்தீனம், ஈரான் ஆகிய இடங்களில்
கிடைக்கும் பெருங்கற் புதைகுழிகள் அடுத்துத் தென்னிந்தியாவிற்குள்
காணப்படுகின்றன. உலகில் வேறெங்குமே அவற்றைக் காணமுடியாது. இக்
காரணத்தைக் கொண்டு மத்திய தரைக்கடல் மக்கள் தென்னிந்தியாவுக்குக்
குடிபெயர்ந்து வந்தவர்கள் என்று ஊகிக்கலாம். மேக்ரான், பலூசிஸ்தானம்,
சிந்து ஆகிய தரைப் பகுதிகளைக் கடந்தும், கடல் வழியாகவும்
தென்னிந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் திராவிட இனத்தினர் என்று சில
ஆய்வாளர் கருதுகின்றனர். மேற்காசிய மக்களுக்கும் திராவிடருக்குமிடையே
காணப்படும் பழக்கவழக்கங்களிலும் ஈரான், மெசப்பொடோமியா ஆகிய நாட்டு
ஊர்ப் பெயர்களிலும் திராவிடரின் ஊர்ப் பெயர்களிலும் பல ஒற்றுமைகள்
அமைந்திருப்பது இதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது. மக்கள்
பெருவாரியாகக் குடிபெயரும்போது அவர்களுடைய நாகரிகமும், பண்பாடும்,
பழக்கவழக்கங்களும் அவர்களுடனே படர்வது இயைபு. இரு வேறு
இனத்தினர் தமக்குள் வாணிகத் தொடர்பு கொண்டிருக்குங் காலத்தில்
அவர்களுடைய நாகரிகங்களும் பண்பாடுகளும் ஓரளவு ஒன்று கலப்பதுண்டு.
ஆனால், அவை ஒரே விதமாக உருமாறிவிட முடியாது. வரலாற்றுக்கு
முற்பட்ட மிகப் பழங்காலத்தில், இக் காலத்தில் இருப்பதைப் போன்று
விரிவான, விரைவான போக்குவரத்துத் தொடர்புகள் கிடையா. இருவேறு
மக்களினம் தத்தம் பண்பாடுகள் ஒன்று கலந்து உருமாறும் அளவுக்கு
வாணிகத் தொடர்பை நீடித்து வந்தனர் என்று கொள்ளுவது பொருத்தமாகாது;
எனவே மத்தியதரைக் கடல் மக்கள் தென்னிந்தியாவுடன் வாணிகத்
தொடர்பைக் கொண்டார்களோ அல்லரோ, பெருந்தொகையினர்
தென்னிந்தியாவுக்குக் குடிபெயர்ந்து வந்து ஆங்காங்கு வாழலானார்கள் என்ற
கருத்து இயைபுடையதாகத் தோன்றுகின்றது. இவை தவிர
லெமூரியாவிலிருந்தே இக்கூட்டத்தினர் அனைவரும் தென்னிந்தியாவுக்கு
வந்து, இங்கிருந்தே பின் சிலர் சென்றிருக்கலாம்.

     தென்னிந்தியாவில் திராவிடரின் குடியேற்றம் எப்போது நேர்ந்திருக்கக்
கூடும்? தமிழரின் நாகரிகம் என்றொரு தனித்த நாகரிகம் தோன்றி
வளர்ச்சியுற்றது எக்காலமாக இருக்கலாம்? இக் கேள்விகட்கு விடை காணும்
முயற்சியில் விருப்பு வெறுப்புக்கு இடங்கொடுக்கலாகாது. நேரில் கிடைத்துள்ள
அகச்சான்று புறச்சான்றுகளைக் கொண்டும், ஆய்வு விதிகளைக் கொண்டும்