பக்கம் எண் :

34தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

ஆய்வாளர்கள் உண்மை நாடவேண்டும். இத்தகைய மறுக்க முடியாத
சான்றுகள் இன்று கிடைத்துள்ளவை மிகவும் குறைவு என்பதை நாம்
ஒப்புக்கொள்ளவேண்டும். அகழ்வாராய்ச்சி, இலக்கியம், மொழியமைப்பு
ஆகியவற்றின் மூலம் அறிய வேண்டிய செய்திகள் விரிந்துள்ளன.
ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு முதலிய இடங்களில் கிடைத்துள்ள
புதைபொருள்கள், அயல்நாட்டுப் பயணிகளின் பூகோளக் குறிப்புகள், சங்க
இலக்கியம் இவற்றைக் கொண்டு பண்டைய தமிழரின் வரலாற்றையும்
பண்பாடுகளையும் விரிவான முறையில் ஆய்ந்தறிய வாய்ப்புகள் உள்ளன.

     மேற்காசியப் பகுதிகளில் கிடைத்துள்ள பெருங்கற் புதைவுகளின் காலம்
கி.மு. 2500-2000 என்று அறுதியிடப்பட்டுள்ளது. எனவே, லெமூரியாவிலிருந்து
முற்காலத்தில் சென்று இக் கால அளவில் அவ்விடங்களில் வாழ்ந்திருந்த
பண்டைய மக்கள், குடிபெயர்ந்து வந்து இந்தியாவுக்குள் புகுந்து
தென்னிந்தியாவுக்கு வந்து வாழ்க்கையைத் தொடங்கித் திராவிட இனத்தைத்
தோற்றுவித்தனர் என்று கொள்ளுவது வரலாற்றுக்கு உடன்பாடாகும். இக்
குடியேற்றம் கி. மு. 2500ஆம் ஆண்டளவிலேயே தொடங்கியிருக்க வேண்டும்.

     இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் மிகப் பெரியது
ஆதிச்சநல்லூரில் மேற்கொண்டதொன்றாகும். வரலாற்றுக்கு முற்பட்ட
காலத்துடன் தொடர்பு கொண்டுள்ள புதைபொருள்கள் இங்கு ஏராளமாகக்
கிடைத்துள்ளன. மனித எலும்புக் கூடுகள், உரல்கள், மெருகிட்ட
மட்பாண்டங்கள், இரும்பாலான சில கருவிகள், பொன்னாலும்
வெண்கலத்தாலும் செய்யப்பட்ட அணிகலன்கள், பொன் வாய்ப்பூட்டுகள், சிறு
வேல்கள் ஆகியவை அடங்கிய தாழிகள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளன.
இவற்றைப் போன்ற புதைபொருள்கள் சைப்ரஸ் தீவிலும், பாலஸ்தீனத்திலும்
காணப்படுகின்றன. ஆனால், அவ்விடங்களில் இரும்பாலான கருவிகள்
கிடைக்கவில்லை. ஆனால், ஆதிச்சநல்லூரில் இரும்புக் களைக்கொட்டுகளும்
சூலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக் காரணத்தைக் கொண்டு
ஆதிச்சநல்லூர் நாகரிகம் சற்றுப் பிற்பட்ட காலத்தைச் சார்ந்ததெனக்
கொள்ளவேண்டி உள்ளது.

     பழங் கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள் பல
கிடைத்துள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லாவரத்துக்கு அண்மையில்
கற்களினாலான கோடரிகள், உளிகள், சுறண்டிகள், கத்திகள் ஆகிய கருவிகள்
சில கிடைத்துள்ளன. இக்