கருவிகள் மிகவும் கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளன. கற்கருவிகளைச் செம்மையாகச் செதுக்கி மெருகிட அக்கால மக்கள் பயின்றிலர் போலும். கற்கருவிகளையே யன்றி மரத்தாலான ஈட்டிகளையும், தண்டுகளையும் அவர்கள் கையாண்டனர் என்று ஊகிக்கவும் இடமுள்ளது. தமிழகத்தில் வடஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இப் பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. இவற்றைச் சமைப்பதில் கைத்திறனோ நுட்ப அறிவோ பயன்பட்டதாகத் தெரியவில்லை. வேறு சில இடங்களில் ஈட்டிகள், தோண்டு கருவிகள், வெட்டுக் கருவிகள், சம்மட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவையாவும் கற்களில் செதுக்கப்பட்டவை. சென்னைக்கு அண்மையில் கொற்றலையாற்றுப் படுகையிலும் வடமதுரையிலும் பழங்கற்காலக் கருவிகள் பல கிடைத்துள்ளன. கைக்கோடாரியைச் செதுக்குவதில் பழங்கற்கால மக்களுக்கு ஏற்பட்டிருந்த பயிற்சித் திறன் தென்னிந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் ஒரே விதமாகக் காணப்படுகின்றது. இதைக்கொண்டு இவ்விரு நிலப் பகுதிகளுக்கிடையே பழங்கற்காலத்தில் மக்கள் போக்குவரத்தும் குடியேற்றங்களும் ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணவேண்டியவர்களாக இருக்கின்றோம். காடுவெட்டி நிலந்திருத்திக் கொள்ளுவதற்கு ஏற்ற உறுதியான கருவிகள் செய்து கொள்ள அறியாதவர்களாய் அக்கால மக்கள், காடுகளையும் மலைகளையும் ஒதுக்கிவிட்டுச் சமவெளிகளிலும் பீடபூமிகளிலுமே வாழ்ந்து வந்தனர். தமிழகத்தின் தென்கோடியில், சிறப்பாக மதுரைக்குத் தெற்கில், பழங்கற்காலக் கருவிகள் கிடைக்கவில்லை. எனவே, அங்கு அக்காலத்தில் மக்கள் வாழ்க்கை தொடங்கவில்லை என்று கருதலாம். ஏனெனில், அவ்விடங்களில் கற்கருவிகளைச் செதுக்குவதற்கு வேண்டிய ஒருவகைப் பளிங்குக்கல் (Quartzite) காணப்படுவதில்லை. அன்றியும் மக்கள் வாழ்க்கைக்கு இடங்கொடாத அளவு அங்குக் காடுகள் அடர்ந்து வளர்ந்திருக்கவேண்டும். பழங்கற்காலக் கருவிகள் தமிழ்நாட்டில் வட ஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகுதியாகக் கிடைக்கின்றன. அங்கெல்லாம் பழங்கற்கால மக்கள் பரவி வாழ்ந்தனர் என்று அறியலாம். பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் இடம்விட்டு இடம் நகர்ந்து கொண்டே இருந்தனர். பெரும்பாலும் அவர்கள் சமவெளிகளில் வாழ்ந்து வந்தனராயினும், சிற்சில சமயம் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி மலைக்குகைகளில் ஒடுங்கி வாழ்ந்தது முண்டு. |