பழங்கற்காலம் கி.மு. 35,000 ஆண்டுகட்கு முன்பிருந்து சுமார் கி.மு. 10,000 ஆண்டுவரை நிகழ்ந்திருக்கக்கூடும் என அறுதியிட்டுள்ளனர். உலக வரலாறுகளில் பழங்கற்காலத்தை முற்பகுதி யென்றும் பிற்பகுதி யென்றும் வரையறுத்துள்ளனர். இத்தகைய பாகுபாடு ஒன்று தமிழகத்து வரலாற்றுக்குப் பொருந்துமா என்பதைப் பற்றிப் புதைபொருள் ஆய்வாளரிடையே கருத்து வேற்றுமை நிலவுகின்றது. பழங்கற் காலத்துக்கும் புதிய கற்காலத்துக்குமிடையே இடைக்கற்காலம் ஒன்று நிகழ்ந்தது. அக்கால அளவில் வாழ்ந்த மக்கள் மிகச் சிறிய கற்கருவிகள் செதுக்கிக்கொண்டனர். சிக்கிமுக்கிக் கல், அகேட் (Agate), செர்ட்டு ( Chert), ஜாஸ்பர் ( Jasper) போன்ற இரத்தினக் கற்களாலும் இக் கருவிகள் சமைக்கப் பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் சாயர்புரத்திலும், கருநாடக மாநிலத்தில் பிரமகிரியிலும், கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகைகளிலும் இக் கருவிகள் கிடைத்துள்ளன. இடைக் கற்காலத்தின் முற்பகுதியில் அமைந்த புதைகுழிகளில் மட்பாண்டம் காணப்படவில்லை. ஏனெனில், மட்பாண்டம் வனையும் கலையைப் பிற்பகுதியிற்றான் மக்கள் பயின்றனர். இடைக்கால முற்பகுதியிலேயே மக்கள் வேட்டையாடி வயிறு வளர்த்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவர்கள் மான், பன்றி, ஆடு, எலி ஆகியவற்றைப் பிடித்துத் தின்று வயிறு பிழைத்ததற்கும் சான்றுகள் உள்ளன. பிணங்களை மண்ணில் புதைக்கும் வழக்கமும் அப்போதே தொடங்கிவிட்டது. புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. அவர்கள் கற்கருவிகைளை ஒழுங்காகவும் வழுவழுப்பாகவும் செதுக்கினர். இவை படிக்கட்டுக் கல்(Trap Rock) என்ற ஒருவகைக் கல்லினால் செய்யப்பட்டன. உளிகள், சம்மட்டிகள் போன்ற கருவிகளையெல்லாம் அவர்கள் அழகாகச் செதுக்கிப் பளப்பளப்பாகத் தேய்த்து மெருகூட்டியுள்ளனர். திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், வடஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் புதிய கற்காலக் கருவிகள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன. புதிய கற்கால மக்கள் ஆங்காங்குக் குடியேறி நிலையான வாழ்க்கையில் அமர்ந்துவிட்டனர். உழவுத் தொழிலையும் வளர்க்கலாயினர்; ஆடு மாடுகளைப் பழக்கிக்கொள்ளத் தொடங்கினர். படகுகள் கட்டிக் கடலில் ஓட்டக் கற்றுக்கொண்டனர். இம்மக்கள் பயின்ற கலைகள் அனைத்திலும் நெருப்பு |