மூட்டக் கற்றுக்கொண்டதுதான் அவர்கள் வாழ்க்கையில் நாம் காணும் தனிச்சிறப்பாகும். சிக்கிமுக்கிக் கற்களைத் தட்டியும், மரத்தைக் கடைந்தும் இவர்கள் நெருப்பு மூட்டினார்கள். இவர்கள் மட்பாண்டங்களையும் வனைந்தார்கள். கையாலும், சக்கரங்களைக் கொண்டும் சட்டிபானைகள் செய்தார்கள். பஞ்சாலும் மயிராலும் ஆடைகள் நெய்து அணிந்தார்கள்; ஓவியந்தீட்டவும் இவர்கள் ஓரளவு கற்றிருந்தனர். தம் வீட்டுச் சுவர்களின்மேல் வேட்டை நிகழ்ச்சிகளையும் நாட்டியக் காட்சிகளையும் ஓவியங்களாகத் தீட்டினர். புதிய கற்காலப் புதைகுழிகளில் சீப்புகள், எலும்பினாலும் சிப்பியினாலும் கடைந்த மணிகள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. அக்கால மக்களின் கலையுணர்ச்சியை இச் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. இவர்களும் பிணங்களைப் புதைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பெற்ற புதிய கற்காலப் பொருள்கள் வரலாற்றுச் சிறப்புடையவைதாம். இம்மாவட்டத்தில் பையம்பள்ளி என்னும் இடத்தில் தேய்த்து மெருகிட்ட கற்கருவிகள் பல கிடைத்துள்ளன. திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் புதிய கற்காலக் கருவிகளும், வேறு பல வாழ்க்கை வசதிப் பொருள்களும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டு வகைக் கோடரித் தலைகளும் (Celts) என்னும் வகைச் சம்மட்டிகளும், இருவகையான கொத்துக் கருவிகளும் (adzes), அறுவகை உளிகளும், கருமாரப் பட்டடைக் கற்களும், உரல்களும், உலக்கைகளும், தட்டுகளும், தண்டுகளும், இருவகை எந்திரக் கற்களும், அம்மி குழவிகளும், தீட்டு கற்களும், எடைக் கற்களும், கற்சட்டிகளும், அம்புத் தலைகளும் அவற்றுள் சிறப்பானவை. வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ் மக்கள் மிகவும் அகன்ற குழிகளில் பிணங்களைப் புதைக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இக் குழிகள் ‘பெருங்கற் புதைவுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இப் புதைவுகள் ஏற்பட்ட காலத்துக்குப் ‘பெருங்கற்புதைவு’ காலம் (Megalithic Period) என்று பெயர். புதிய கற்காலம் முடிவுற்றவுடன் ஏற்பட்டவை இப் பிணக்குழிகள். கற்காலப் பிணக்குழிகள் காணாத பல புதுமைகளை இக்குழிகளில் காணலாம். பெருங்கற் புதைகுழிகள் மிகமிகப் பெரியவை. இவற்றுள் புதைக்கப்பட்டிருக்கும் பொருள்களும் பலவகையானவை. பிணம் புதைப்பதற்காக மட்டும் இவை ஏற்பட்டனவல்ல; இறந்தவர்களின் நினைவுச் சின்னங்களாகவும் இவை |