அமைந்துள்ளன. உழவு நிலங்களையடுத்துள்ள மலைச்சரிவுகளிலும் மேடுகளிலும் இப் புதைவுகள் மிகுதியாகக் காணப்படு கின்றன. மக்கள் நிலையான வாழ்க்கையில் அமர்ந்து உழவை மேற்கொண்ட பிறகு ஏற்பட்ட குழிகள் இவை எனக் கொள்ளலாம். பெருங்கற் புதைவுகள் வடஆர்க்காடு, தென்னார்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் தோண்டி யெடுக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் கொச்சிப் பகுதியில் ‘குடைக்கல்’ அல்லது ‘தொப்பிக்கல்’ என்ற குழிகளை அகழ்ந்து வெளிப்படுத்தி யிருக்கின்றார்கள். தென்னார்க்காட்டில் சங்கமேடு என்னும் இடத்திலும், செங்கற்பட்டு மாவட்டத்தில் சானூர் அமிர்தமங்கலம், குன்றத்தூர் என்னும் இடங்களிலும் பெருங்கற் புதை குழிகள் கிடைத்துள்ளன. பெருங்கற் புதைவுகள் மத்தியதரைக் கடற்பகுதியிலும் காணப்படுகின்றன. அவை கி.மு. 2500-1500 ஆண்டுகளில் ஏற்பட்டவை என்று புதைபொருள் ஆய்வாளர் அறுதியிட்டுள்ளனர். அக் குழிகளுக்கும் தமிழகத்துப் பெருங்கற் புதைவுகட்குமிடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆனால் வேறுபாடும் காணப்படுகின்றது. மத்தியதரைக் குழிகளில் இரும்புக் கருவிகள் கிடைத்துள்ளன. தமிழகக் குழிகளில் இரும்பே கிடைக்கவில்லை. ‘கார்பன் 14’ என்னும் வேதியியல் மின்னணுச் சோதனையின் மூலம் பிரமகிரி ‘கற்கோடரி நாகரிகம்’ கி.மு. 1000 ஆண்டுகட்கும் முற்பட்டதெனத் தோன்றுவதால், தமிழகப் புதைகுழிகள் கி.மு. 1000ஆம் ஆண்டளவில் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஊகித்தறியலாம். செங்கற்பட்டு மாவட்டத்தில் மட்டும் சுமார் இருநூறு பெருங்கற் புதைவுகள் அகழப்பெற்றுள்ளன. அவை இருவகையாக அமைந்துள்ளன; ஒன்று ‘குகை வட்டங்கள்’ என்பது. இவ்வகைக் குழிகள் ஓர் அறையைப் போல அமைக்கப்பெற்றுள்ளன. குழியின் அடிமட்டத்தில் பலகைக்கல் ஒன்று பாவப்பட்டுள்ளது; மற்றொரு பலகைக்கல் குழியை மூடி நிற்கின்றது. தரைமட்டத்தில் குழிவாயைச் சுற்றி ஒற்றை வட்டமாகவோ அன்றி ஒன்றுக்குள் ஒன்றாக இரு வட்டங்களாகவோ கற்கள் செங்குத்தாக நாட்டப்பட்டுள்ளன. இரண்டாம் வகை, ‘குழிவட்டங்கள்’ என்பது. இவை ஒவ்வொன்றிலும் ஒரு தாழியோ ஒன்றுக்கு மேற்பட்ட தாழிகளோ புதைக்கப்பட்டுள்ளன; இத் தாழிகள் யாவும் மண்ணாலானவை. இவற்றுள் பிணங்கள் புதைக்கப்பட்டன. சில தாழிகளுக்குக் |