கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழி வட்டங்களைச் சுற்றி ஒற்றை வட்டக் கற்களை நாட்டியுள்ளனர். பெருங் கற்புதைவு காலத்தின் மக்கள் கற்கருவிகளைக் கைவிட்டு இரும்புக் கருவிகளைக் கையாளலானார்கள். தமிழகத்தில் புதிய கற்காலத்தையடுத்து ‘இரும்புக் காலம்’ தொடங்கிற்று. ஆனால், வடஇந்தியாவில் புதிய கற்காலத்தை யடுத்துச் ‘செம்புக் காலம்’ தொடங்கிற்று. கற்காலத்துக்கும் இரும்புக் காலத்துக்கும் இடையில் செம்பு அல்லது வெண்கலக் காலம் ஒன்று தமிழகத்தில் நிகழாதது வியப்பாகவுள்ளது. இந் நிலைக்கு இரு வேறு காரணங்கள் காட்டப் பெறுகின்றன. ஒன்று, மக்கள் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்குக் குடி பெயர்ந்து வந்தபோது முதன்முதல் இரும்பைத் தம்முடன் கொண்டு வந்திருக்கலாம் ; மற்றொன்று, கற்காலத்திலேயே மக்கள் இரும்பைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். இரண்டாம் காரணமே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. மட்கலங்கள் வனைவதற்குத் தகுதியான மண்ணைத் தேடியபோது பலவகையான மண்ணையும், பாறைகளையும் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள் ; பச்சை மட்கலங்களைச் சூளையில் சுட்டிருப்பார்கள். அப்போது அவர்கள் தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்திருக்கலாம். மத்தியதரைக் கடலிலுள்ள கிரீட் என்னும் தீவிலும் பாலத்தீனத்திலும் காணப்படுவதைப் போலவே ஆதிச்சநல்லூரிலும் கற்கருவிகளுடன் இரும்புக் கருவிகளும் கலந்து காணப்படுகின்றன. செங்கற்பட்டில் பெரும்பேயர் என்னும் இடத்திலும், கேரளத்தில் தலைச்சேரி என்னும் இடத்திலும் இவ்வாறே கற்கருவிகளும், இரும்புக் கருவிகளும் கலந்தே கிடைத்துள்ளன. எனவே, தமிழகத்தில் கற்காலம் முடிவுறும் போதே இரும்புக் காலமும் தொடங்கிவிட்டது என்று கருத இட மேற்படுகின்றது. |