பக்கம் எண் :

40

                  4. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி

     ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையும்போது வடமேற்கு இந்தியாவிலும்,
வடஇந்தியாவிலும் திராவிட இனத்து மக்கள் வாழ்ந்து வந்தனர் என்று சில
ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த பேராசிரியர்
பர்ரோ (Burrow) என்பார் அவர்களுள் ஒருவர். ஆரிய மொழியை நன்கு
ஆய்ந்து இருக்கு வேதத்தில் இருபது திராவிட மொழிச் சொற்கள்
ஆளப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார். ஏற்கெனவே சிந்து கங்கை வெளியில்
செழித்து வாழ்ந்திருந்த திராவிடரிடமிருந்து பிற்காலத்தில் வந்து குடியேறிய
ஆரியர் பல திராவிட மொழிச் சொற்களைத் தம் மொழியில்
ஏற்றுக்கொண்டனர் என்பது இவருடைய முடிபாகும். வேறு பல ஆய்வாளரும்
இவருடைய கருத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். லஹோவரி என்னும்
ஆராய்ச்சியாளர் வியப்பூட்டும் ஊகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பல
மொழிகளை ஆராய்ந்து ஒப்புநோக்கி முடிவாகத் திராவிட மொழிக்கும்
ஸ்பெயின் நாட்டு பாஸ்க் (Basque) மக்களின் மொழிக்கும் இடையே பல
ஒற்றுமைகளைக் கண்டார். இவ்விரு மொழிகளும் ஒரே மொழிக் குடும்பத்தைச்
சேர்ந்தவை என்று ஒரு முடிவுக்கு வந்தார். சுமேரிய, எலாமைட், கப்படோசிய
மொழிகளும் இக் குடும்பத்தில் பிறந்தவையே என்று அவர் கருதினார்.
ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த ஐபீரியா முதல் இந்தியா வரையில் அமைந்துள்ள
நாடுகள் அனைத்தும் சமயப் பழக்க வழக்கங்களிலும், சடங்குகளிலும்
ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன என்று இவர்
கண்டார்.

     லஹோவரியின் முடிபுகளையும் நாம் ஓரளவு ஏற்றுக் கொள்ள வேண்டிய
நிலையில் உள்ளோம். சுமேரியா, செமச்பொடொமியா போன்ற மேற்காசிய
நாடுகட்கும் திராவிடர்கட்குமிடையே நெருங்கிய நாகரிக, பண்பாட்டுத்
தொடர்புகள் அமைந்துள்ளன. திராவிடர்கள் மேற்காசியா வினின்றும்
குடிபெயர்ந்து ஈரான் வழியாக வந்து வடமேற்குக் கணவாய்களின் மூலம்
சிந்துசமவெளியில் இறங்கிக் குடியமர்ந்து அங்கொரு மாபெரும் நாகரிகத்தை
வளர்த்திருக்கக் கூடும். பிறகு அவர்கள் எக் காரணத்தினாலோ
சிந்துவெளியைக் கைவிட்டுத் தெற்குப்