படர்ந்து தமிழகத்தில் தங்கி இங்கொரு நாகரிகத்தை வளர்த்திருக்கக்கூடும். அல்லது லெமூரியாவிலிருந்து தென்னிந்தியா ஆப்பிரிக்கா முதலிய இடங்களுக்குச் சென்று சிலர் மத்திய தரைக்கடல் நாடுகளில் சில காலம் வாழ்ந்து, வடஇந்தியா வழியாகத் தெற்கு வந்திருக்கலாம். ‘தமிழர் யார்?’ என்னும் கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வரலாற்றாய்வாளருள் மிகவும் சிறந்தவர் ஹீராஸ்பாதிரியார். சிந்துவெளியில் வரலாற்றுப் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன. அவற்றினின்றும் புதைபொருள்கள் பல கண்டெடுக்கப்பட்டன. இவ் வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் சிந்துவெளியில் மிகப் பழங்காலத்தில் பெரியதொரு நாகரிகம் செழித்து வளர்ந்திருந்ததென்றும், பிறகு எக் காரணத்தாலோ அது அறவே அழிந்து மறைந்து போயிற்றென்றும் சில கருத்துகளை வெளியிட்டனர். சிந்துவெளியில் மொகஞ்சதாரோ, ஹாரப்பா என்ற இரு நகரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விடங்கள் இப்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ளன. இவையே யன்றி, சானுடாரோ, கோட்டீஜி, லோதால், காளிபங்கன் என்னும் இடங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் புரிந்து பண்டைய நாகரிகச் சின்னங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்நான்கு இடங்களும் இந்திய நாட்டு எல்லைகளுக்குள் அமைந்துள்ளன. முதன்முதல் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் செய்து அரிய பெரிய கருத்துகளையும், விளக்கங்களையும், வரலாற்றுத் துறைக்குத் தந்துதவியவர் சர் ஜான் மார்ஷல் ஆவார். வரலாற்று உலகை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்திய பல பொருள்கள் இந்நகரங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு சிந்துவெளி முழுவதும் பரவியிருந்த ஒரு பெரும் நாகரிகத்தின் சின்னங்களாம் அவை. கட்டடங்களைச் செப்பனிடுவதிலும், நகரத்தின் அமைப்பிலும் மொகஞ்சதாரோ, ஹாரப்பா ஆகிய இரு நகரங்களிடையே மிக நெருங்கிய ஒற்றுமைப்பாடுகள் பல காணப்படுகின்றன. ஆதிகாலத்தில் மொகஞ்சதாரோ செழிப்பானதொரு நகரமாக விளங்கியதாகவும், பிறகு அது வெள்ளத்தில் மூழ்கி மண்மேடிட்டுப் போனதாகவும் அதன்மேல் வேறொரு நகரம் எழுந்ததாகவும், அஃதும் பிறகு வெள்ளத்தில் அழிந்து போகவே அதன்மேல் மற்றுமொரு நகரம் அமைக்கப்பட்டதாகவும், அஃதும் வெள்ளத்தில் மூழ்கிப் போகவே மீண்டும் ஒரு நகரம் அமைக்கப்பட்டதாகவும், இவ்வாறே ஏழு நகரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக எழுந்து அவை |