சுந்தரசோழனும் தொடர்ந்து விண்ணுலகெய்தினான். அவனை யடுத்து உத்தம சோழன் அரசுகட்டில் ஏறினான். சோழனைக் கொலை செய்தவர்கள் இன்னார் எனப் புலன்கண்டு பிடித்து அவர்களை ஒறுக்கும் முயற்சியை உத்தம சோழன் தன் ஆட்சிக் காலம் முழுவதிலும் எடுக்கவே இல்லை. சோழன் என்பான் ஒருவனும் அவன் தம்பியும் பாண்டியன் தலைகொண்ட கரிகாற் சோழனைக் கொலை செய்தார்கள் என்றும் அக் குற்றத்துக்குத் தண்டனையாக அவர்களுடைய உடைமைகளும், அவர்களுடைய சுற்றத்தாரின் உடைமைகளும் பறிமுதல் செய்யப்பட்டனவென்றும, பிறகு விற்கப்பட்டனவென்றும் இராசகேசரி வர்மன் (முதலாம் இராசராசன்) பேரில் வெளியான கல்வெட்டு (கி.பி. 988)13 ஒன்று தெரிவிக்கின்றது. எனினும், இக் கொடுங் கொலைக் குற்றத்தில் உத்தம சோழனுக்கும் பெரும் பங்கு உண்டு என்று வரலாறு வற்புறுத்துகின்றது. பலவான கல்வெட்டுகளிலிருந்தும் செப்பேடுகளிலிருந்தும் உத்தம சோழனின் ஆட்சியைப் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. அவன் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயம் ஒன்றும் கண்டெடுக்கப் பட்டுள்ளது. அதன்மேல் ‘உத்தம சோழன்’ என்னும் பெயர் கிரந்த எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ள உத்தம சோழனின் செப்பேடு ஒன்று (கி.பி. 984-5)14 அம் மன்னனைப் பற்றியும், அவனுடைய அரசிமார்களைப் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் பல செய்திகளைத் தெரிவிக்கின்றது. அச் செப்பேட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் மிகவும் அழகாக விளங்குகின்றன. அம்பலவன் பழுவூர் நக்கன் என்பான் ஒருவன், குவலாளத்தைச் (கோலாரை) சேர்ந்தவன். உத்தம சோழனுக்குப் பெருந்தரத்துப் பணியாளனாகத் தொழில் புரிந்து வந்ததாகத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டுகள் சில தெரிவிக்கின்றன. திருநாவுக்கரசரின் பாடலைப்பெற்ற விசயமங்கலத்துக் கோயிலை இவன் கற்றளியாக மாற்றியமைத்தான். இவன் மிகச் சிறந்த ஆட்சித் திறனும் இனிய பண்பாடுகளும் வாய்ந்தவன் என அறிகின்றோம். முதலாம் இராசராசன் காலத்திலேயே இவன் சோழர் பணியில் அமர்ந்திருந்தவன். இவனுடைய திறமையைப் பாராட்டி உத்தமசோழன் இவனுக்கு ‘விக்கிரமசோழமாராயன்’ 13. Ep. Ind. XXI. No. 27. 14. S. I. I. III. No. 128. |