பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 263

                      13. சோழப் பேரரசின்
                     வளர்ச்சியும் வீழ்ச்சியும்

மாமன்னன் முதலாம் இராசராசன் (கி.பி. 985-1014)

     உத்தம சோழனுக்குப் பிறகு இராசராசன் அரியணை ஏறினான். இவன்
பல்லாண்டுகள் இளவரசனாக அமர்ந்திருந்து, ஆட்சிப் பொறுப்புகள்
பலவற்றை ஏற்று நடத்தி அரசியலில் ஆழ்ந்த அனுபவமும், ஆற்றலும்,
நுண்ணறிவும் வாய்க்கப் பெற்றிருந்தான். சோழப் பரம்பரையின் பேரையும்
புகழையும் பன்மடங்கு உயர்த்திவிட்டவன் இராசராசன்தான். இவன்
காலத்திலும், இவன் மகன் இராசேந்திரன் காலத்திலும் தமிழரின் மறமும்
பண்பாடுகளும் கடல் கடந்து சென்று மக்கள் கருத்தைக் கவர்ந்தன.
இராட்டிரகூடரின் படையெடுப்புகளினால் திறனிழந்து வளமிழந்து
சுருங்கிவிட்ட சோழ நாட்டை மீண்டும் விரிவுற்று மிகப் பெரியதொரு
பேரரசாக வரலாற்றில் திகழவைத்த பெருமை முதலாம் இராசராசனையே
சாரும். இப் பேரரசன் தன் வாழ்க்கையில் எய்திய மாபெரும் வெற்றிகளை
நோக்கும்போது, இவன் நெடுந்தோற்றமும், உடற்கட்டும், மேனியழகும்,
பேராற்றலும், நுண்ணறிவும், கலைப் பயிற்சியும், நிருவாகத்திறனும் வாய்க்கப்
பெற்றிருக்க வேண்டும் என்று எளிதில் ஊகித்தறியலாம்.

     இராசராசன் தன் குடும்பத்தைப் போற்றிப் புரந்தான். இவனுக்குப்
பதினைந்து மனைவியர் இருந்தனர். எனினும், தந்திசக்தி விடங்கி என்பவளே
பட்டத்தரசியாகத் திகழ்ந்தாள். இவளுக்கு உலகமகாதேவி யென்றும் ஒரு
பெயர் உண்டு. திருவிசனூர்க் கோயிலில் இராசராசன் துலாபார விழா
எடுத்தபோது இவள் இரணியகருப்பம் என்னும் விழா எடுத்தாள். இவ்விரு
விழாக்களிலும் கிடைத்த பொன்னைக் கொண்டு தந்திசக்தி விடங்கியானவள்
திருவலஞ்சுழியில் கோயில் ஒன்று எடுப்பித்தாள். முதலாம் இராசேந்திரனைப்
பெற்றெடுத்த பெருமைக்குரியவள் வானவன் மகாதேவி என்கிற திரிபுவன
மகாதேவியாவாள். இராசராசனின் தமக்கையார் குந்தவை