பக்கம் எண் :

264தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

என்னும் ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியார் ஆவாள். இவள்
வல்லவரையர் வந்தியதேவனின் மனைவி. குந்தவைமேல் இராசராசன்
குடும்பத்தில் அளவிறந்த அன்பும் நன்மதிப்பும் சொரியப்பட்டன. தஞ்சைப்
பெருவுடையார் கோயிலில் இராசராசன் வழங்கிய நிவந்தங்களையடுத்து
இவளுடைய நிவந்தங்கள் தாம் இடம் பெறுகின்றன. இராசராசனின்
பெண்மக்கள் மூவருள் சளுக்க விமலாதித்தனின் மனைவியான குந்தவை
ஒருத்தி ; மற்றொருத்தி மாதேவடிகள். மகள் குந்தவை மீதும், உத்தம
சோழனின் அன்னையாரான செம்பியன் மாதேவியிடத்தும் இராசராசன்
பேரன்பைப் பொழிந்து வந்தான்.

     தான் சோழநாட்டின் அரியணை ஏறியவுடனே ‘இராசகேசரி
அருண்மொழி’ என்றும், ‘மும்முடிச்சோழன்’ என்றும் சில விருதுகளைத் தன்
பேருடன் இணைத்துக் கொண்டான். மும்முடி என்றால் மும்முறை சோழன்
என்று பொருள். இரும்பு, நூறுமடி என்ற விருதுகளையும் இவன் தன்
ஆட்சிக்காலத்தின் இரண்டாம் ஆண்டிலிருந்து முப்பத்தொன்றாம்
ஆண்டுவரையில் ஏற்றுக்கொண்ட செய்திகளைக் கல்வெட்டுகள்
தெரிவிக்கின்றன. கல்வெட்டு மெய்க்கீர்த்திகளில் மன்னனின் ஆட்சியின்
வரலாற்றைச் சேர்த்து எழுதும் வழக்கம் இவன் காலத்திற்றான் முதன்முதல்
தொடங்குகின்றது. இவ் வழக்கத்தைப் பின்வந்த மன்னரும் பின்பற்றி வந்தனர்.
இராசராச சோழனின் அரசியலைப் பற்றிய செய்திகள் பலவற்றைத்
தெரிந்துகொள்ளுவதற்கு இம் மெய்க்கீர்த்திகள் பெரிதும் துணைபுரிகின்றன.
இம் மெய்க்கீர்த்திகள் கூறும் செய்திகளை உறுதி செய்யக்கூடிய பிற சான்றுகள்
ஒன்றேனும் இப்போது கிடைத்திலது. இராசராசனின் இருபத்தொன்பதாம்
ஆட்சி யாண்டுக் கல்வெட்டு ஒன்று,

   
‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்,
    தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
    காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி,
    வேங்கை நாடும் கங்கை பாடியும்,
    தடிகை பாடியும் நுளம்ப பாடியும்,
    குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்,
    முரட்டெழில் சிங்களர் ஈழமண் டலமும்,
    இரட்ட பாடி ஏழரை இலக்கமும்,
    முன்னீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்
    திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
    னெழில்வளர்ஊழியுள் எல்லா யாண்டும்