தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராச கேசரி வன்மரான ஸ்ரீராசராச தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பது வரை....’ என்று கூறி மெய்க்கீர்த்தியானது அவன் கொண்ட வெற்றிகளையும் விளக்குகின்றது. மும்முடிச் சோழன், சோழ மார்த்தாண்டன், சயங்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், தெலிங்ககுலகாலன் என்பவை இராசராசன் ஏற்றுக்கொண்ட விருதுகளில் சில. இவை யாவும் அவனுடைய வெற்றிப் பெருமைகளை எடுத்துக் காட்டுகின்றன. சோழநாட்டின் மணிமுடி புனைந்துகொண்டவுடனே இராசராசன் அண்டை நாடுகளை வென்று சோழநாட்டின் எல்லையை விரிவுபடுத்தும் வீரச் செயலில் ஈடுபடலானான். முதன்முதல் அவன் மேற்கொண்ட திக்குவிசயமானது தென்பாண்டி நாட்டுப் போருடன் தொடங்கப் பெற்றதென்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. பாண்டியரும், சேரரும், சிங்களரும் என்றுமே சோழரை எதிர்த்துப் போரிடுவதென்று ஓருடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்கள். இராசராசன் காலத்திலும் இவ் வுடன்படிக்கை செயலில் இருந்துவந்தது. எனவே, இராசராசன் முதன்முதல் பாண்டியன் மேலும், சேரன் மேலும் போர் தொடுத்தான். அப்போது அமரபுசங்கன் பாண்டி நாட்டு அரியணையையும் பாஸ்கர ரவிவர்மன் திருவடி என்பான் (கி.பி. 964-1021) சேரநாட்டு அரியணையையும் அணிசெய்து வந்தனர். இராசராசன் தொடக்கத்தில் கேரளத்தில் விழிஞம் என்ற இடத்தைக் கைப்பற்றினான். பிறகு காந்தளூர்ச்சாலை என்ற இடத்தைத் தாக்கி வென்று அங்கு அணிவகுத்து நின்ற மரக்கலங்களையெல்லாம் அழித்தான். சாலை என்னும் இடம் இப்போது திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்று சிலர் கருதுவர். ஆனால், அது உண்மையில் அந் நகருக்குத் தெற்கில் பதினாறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் இடமாகும். இராசராசனின் மெய்க்கீர்த்திகள் அனைத்தும் அம் மன்னன் பெயருக்கு முன்பு ‘காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தருளிய’ என்னும் அடைமொழியைக் கொண்டே விளங்குகின்றன. இவ் வடைமொழிச் சொற்கள் இராசராசனின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளிலேயே காணப்படுகின்றன. அப் பேரரசன் தன் வாழ்க்கையில் பெற்ற வெற்றி இஃதே போலும். இவ் விருது எந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றது என்பதைப் பற்றி |