ஆய்வாளரிடையே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. ‘இராசராசன் காந்தளூரில் மணிமண்டபம் ஒன்று கட்டினான்’1 என்று ஒரு கருத்து முதன்முதல் நிலவி வந்தது. பிறகு காந்தளூரில் அரசன் கலம் ஒன்றைத் துண்டாக்கினான் என்று ஒரு கருத்தும் ஆய்வாளரிடையே தோன்றிற்று.2 காந்தளூர்த் துறைமுகத்தில் மன்னன் கலங் (கப்பல்)களை அழித்தான் என்று கொள்ளுவதையே ஆய்வாளர் பலரும் ஏற்றுக்கொண்டார்கள்; ‘காந்தளூர் அறச் சாலையில் சோறு அடுவதை மன்னன் நிறுத்திவிட்டான்’ என்ற கருத்தும்,3 ‘அரசன் காந்தளூர்ச் சோற்றுச் சாலையில் உணவு வழங்க வேண்டிய முறையை நிருணயித்துத் திட்டஞ் செய்தான்’ என்ற கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் கருத்தும் ஏலாவென ஒதுக்கப்பட்டன. காந்தளூர்ச் சாலையில் கலமலறுத்தருளிய விருதை முதலாம் இராசராசனே யன்றி, அவனுக்குப் பின் முதலாம் இராசேந்திரன்,4 முதலாம் இராசாதிராசன்,5 முதலாம் குலோத்துங்கன்6 ஆகிய மன்னரும், சடாவர்மன் பராந்தக பாண்டியனும்7 ஏற்றுக்கொண்டுள்ளனர். பழங்காலந்தொட்டே காந்தளூர் என்பது சிறந்ததோர் இடமாக விளங்கி வருகின்றது. சுவரன் மாறன் என்ற முத்தரைய மன்னன் ஒருவன் காந்தளூரில் மாற்றானுடன் போராடிப் பெரு வெற்றி கண்டான் என்று செந்தலைக் கல்வெட்டு ஒன்று8 கூறுகின்றது. காந்தளூர்ச் சாலை என்னும் சொற்றொடர் ஆய்குல வேந்தன் கருநந்தடக்கன் என்பவன் பொறிப்பித்த செப்பேடு ஒன்றிலும் (கி.பி.868) காணப்படுகின்றது. காந்தளூரில் உள்ள சாலையை மாதிரியாகக்கொண்டு அதைப் போலவே மற்றொரு சாலையைப் பார்த்திவசேகரபுரம் என்னும் இடத்தில் அவன் நிறுவியதாக அச் செப்பேட்டுச் சாசனம் கூறுகின்றது.9 இந்தச் செய்தியைக் கொண்டு காந்தளூரில் புகழ் பெற்ற சாலை ஒன்று இருந்ததென்றும், அதையே தன் குறிக்கோளாகக் கொண்டு கருநந்தடக்கன் வேறு ஊரிலும் சாலையை அமைத்தான் என்றும் அறிகின்றோம். காந்தளூர்ச் சாலையில் என்ன நிகழ்ந்து வந்தது என்று தெரியவில்லை. ஆனாலும், கருநந்தடக்கன் செப்பேட்டில், அரசன் சிறிது சிறிதாக மின்சிறை என்னும் ஊர்ச் சபையாரிடமிருந்து சில விளைநிலங்களைப் பெற்றான் 1. S. I. I. I. P. 65. 2. S. I. I. II. P. 35, 37, 241-47 3. T. A. S. II. Pp. 3 & 4. 4. Ep. Rep. 368/17. 5. S. I. III. P. 56. 6. விக், சோ, உலா, 24. 7. T. A. S. I. P. 18. 8. Ep. Ind. XIII. P. 146. 9. T. A. S. I. P. 1-14. |