என்றும், அதற்கு ஈடாக வேறு சில நிலங்களை அளித்தான் என்றும், அந் நிலங்களைக் கொண்டு பார்த்திவசேகரபுரம் என்னும் கிராமத்தை நிறுவி, அக் கிராமத்தில் விஷ்ணு பட்டாரகருக்கு ஒரு கோயிலை எழுப்பினான் என்றும், காந்தளூர் மரியாதையால் தொண்ணூற்று ஐவர் சட்டர்க்கு ஒரு சாலையும் செய்து கொடுத்தான் என்றும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் அச் செப்பேட்டில், ‘இச்சாலைக்குப் பெய்த கலத்தில் பவிழிய சரணத்தார் உடைய கலம் நாற்பத்தைந்து ; தயித்திரியச் சரணத்தார் உடைய கலம் முப்பத்தாறு ; தலவகார சரணத்தார் உடைய கலம் பதினான்கு. இனி வருங்காலம் மூன்று சரணத்தார்க்கும் ஒப்பாது’ - என்னும் செய்தியும் காணப்படுகின்றது. எனவே, பார்த்திவசேகரபுரத்துச் சாலை என்பது மாணவர்கள் தங்கிக் கல்வி கற்று வந்த நிறுவனம் என்று அறிகின்றோம். அதைக் கொண்டு இச் சாலைக்கு முன்மாதிரியாக அமைந்திருந்த காந்தளூர்ச் சாலையும் ஒரு கல்வி நிறுவனமாக இருந்திருக்கலாம் என்று டி.என்.சுப்பிரமணியம் கருதுகின்றார்.10 அவர் கருத்துக்குப் பல சான்றுகளையும் கொடுத்துள்ளார். இவ்விரு சாலைகளிலும் மாணவர்கள் தங்கியிருந்து, உணவு கொண்டு கல்வி பயின்று வந்துள்ளனர். தற்காலத்துப் பல்கலைக்கழகங்களுக்கு இச் சாலைகளை ஒப்பிடலாம். பிறருடைய தலையீடு ஏதும் இன்றியே இச் சாலைகள் நடைபெற்று வந்தன. மாணவருக்குக் கல்வி பயிற்றி வந்த குருகுலங்கள் நாட்டில் ஆங்காங்கு நடைபெற்று வந்தன. மாணவர்கள் தங்கிக் கல்வி பயிலுவதற்கு இறையிலி நிலங்கள் நிவந்தங்களாக விடப்பட்டன. கல்வெட்டுகளில் காணப்படும் சாலை, சாலாபோகம் என்னும் சொற்கள் அக் கல்வி நிறுவனங்களையும், அந் நிவந்தங்களையுமே குறிப்பனவாகக் கொள்ள வேண்டியுள்ளது. பார்த்திவசேகரபுரத்துச் சாசனம் வேறு சில செய்திகளையும் தெரிவிக்கின்றது. அவ்வூர்ச் சாலையில் கல்வி பயிற்றிய சட்டர்கள் (ஆசிரியர்கள்) சேர, சோழ, பாண்டியரின் ஆட்சியில் பங்கு கொள்ளும் பயிற்சியும் அறிவும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் என்றும், விதிக்கப்பட்ட சில ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு அவர்கள் படைக்கலங்கள் தாங்கும் தகுதி பெற்றிருக்க வேண்டுமென்றும், வேதங்கள் வியாகரணங்கள் மட்டுமன்றி அரசியலிலும் போர்களிலும் பெற வேண்டிய பயிற்சியை மாணவர்கள் சுவடிகளின் வாயிலாகவும், நடைமுறையிலும் அளிக்கப்பட்டு வந்தனர் என்றும் அச் சாசனத்தால் 10. S. I. Temp. Inscrpts. Vol. III. (2) I. P. 15. Tamil portion Edn. Govt. Orl. Mss. Library. |