பக்கம் எண் :

தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்3

எளிதாகத் தோன்றவில்லை ; அதில் பல கருத்து வேறுபாடுகளும் உண்டு.
ஆனால், சங்க கால வரலாற்றுக்கு நாணயங்கள் புரிந்துள்ள உதவி
மதிப்பிடற்கரியதாகும். தாம் அளிக்கும் சான்றுகளுடன் அவை சங்க இலக்கியச்
செய்திகள் பலவற்றையும் மெய்ப்பிக்கின்றன. ஆனால், இந் நாணயங்களில்
பெரும்பான்மையன அந்நிய நாட்டு நாணயங்கள் ஆம்.

     தமிழக வரலாற்றைத் தொகுக்க உதவும் கல்வெட்டுகள் பல்லவர்
காலத்தில்தான் தொடங்குகின்றன. அதற்கு முன்பு நடுகற்கள் ஆங்காங்குத்
தமிழகத்தில் இருந்தனவென்றும், மக்கள் அவற்றை வழிபட்டு வந்தனர்
என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்றேனும் இப்போது
கிடைக்கவில்லை. பல்லவர்கள் காலத்திய கல்வெட்டுகள் ஏழு, எட்டாம்
நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை. முதலில் அவை கிரந்த எழுத்துகளில்
பொறிக்கப்பட்டன. பிறகு அவற்றில், தமிழ்மொழிக் கலப்புத் தோன்றுகின்றது.

     மரபுதமிழ் எழுத்து என்றும், வட்டெழுத்து என்றும் தமிழ் எழுத்துகள்
இரு வகையாக ஆளப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்து வரிவடிவங்கட்கும்
தோற்றுவாய் இன்னதென இன்னும் அறியக்கூடவில்லை. ஆனால்,
வட்டெழுத்துக்கள் 9 ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தினின்றும்
வழக்கொழிந்து மறைந்து விட்டன. தொடர்ந்து சிறிது காலம் அவை சேர
நாட்டில் வழக்கில் இருந்துவந்தன. 7ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வெட்டுச்
சாசனங்கள் நூற்றுக்கணக்கில் தமிழகம் முழுவதிலும் கிடைத்துள்ளன.
பாண்டியர் சோழர் காலத்திய வரலாற்றைத் தொகுப்பதற்கும் அவர் காலத்திய
மக்கள் சமுதாயத்தின் நிலையை அறிந்து கொள்ளுவதற்கும்
கல்வெட்டுகளேயன்றி அக் காலத்துப் பொறித்து அளிக்கப்பெற்ற செப்பேட்டுப்
பட்டயங்களும் பெரிதும் துணை புரிகின்றன. வேள்விக்குடிச் செப்பேடுகளும்,
பெரிய சின்னமனூர்ச் செப்பேடுகளும் கிடைத்திராமற் போனால் ஏழு முதல்
பத்தாம் நூற்றாண்டு வரையிலான பண்டைய பாண்டியர் வரலாறும்,
களப்பிரரைப்பற்றிய சில தகவல்களும் நம் கைக்கு எட்டியிரா. அதைப்
போலவே பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் பரம்பரையைப் பற்றிய
குறிப்புகளும் சில செப்பேடுகளின் மூலமாகவே அறியக்கிடக்கின்றன.

     தமிழக வரலாறு ஒன்று எழுதுவதற்குத் துணைபுரிந்துள்ள சான்றுகளைக்
காலப் பகுப்பின்படியே சீர்தூக்கி ஆராய்வோம்.

    
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் : சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகளுக்குப்
பிறகு தமிழரின் வரலாறும் நாகரிகமும் புதிய கோணங்களிலிருந்து