பக்கம் எண் :

4தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

நோக்கப்பட்டு வருகின்றன. சிந்துவெளி நாகரிகம் பண்டைய தமிழரால்
வளர்க்கப்பட்டது அன்று என்று அண்மையில் சில ஆய்வாளர்கள் தம்
கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எனினும், அந் நாகரிகத்தைப் பற்றிய

     ஆய்வுகள் புதுமுறை விஞ்ஞான சாதனங்களின் துணையுடன்
நடைபெற்று வருகின்றன. மொகஞ்சதாரோ, ஹாரப்பா மக்கள் கையாண்ட
எழுத்துகளில் மறைந்து கிடக்கும் செய்திகள் இன்னும் வெளியாகவில்லை ;
அவர்களுடைய எழுத்து முறைகட்கும் இந்தோ ஐரோப்பிய எழுத்து
முறைகட்கும் ஒரு தொடர்பைக் கற்பிக்கும் ஆய்வுகளும் அறிஞர் ஒப்புக்
கொள்ளும் அளவுக்கு விளக்கமாக இல. எனவே, சிந்துவெளி நாகரிகம் இன்ன
மரபினதெனத் தெளிவாகும் வரையில் ஹீராஸ் பாதிரியாரின் கொள்கையையே
நாமும் தொடர்ந்து மேற்கொண்டு வரவேண்டியுள்ளது. ஹாரப்பா
எழுத்துகளுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் தொடர்பு உண்டென்று அவர்
கருதினார்.

     வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்த மக்கள்
பெரிய பெரிய பெருங்கற்குழிகளில் (பாழிகளில்) பிணங்களைப் புதைக்கும்
வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இக் குழிகளில் பலவகையான இரும்புக்
கருவிகளும் சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்ட மட்பாண்டங்களும்
புதைக்கப்பட்டுள்ளன. இத்தகைய புதைகுழிகள் மேற்காசிய நாடுகளிலும்,
வடஆப்பிரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
அவற்றுக்கும், தமிழகத்துக் குழிகட்கும் பல ஒற்றுமைகள் தோன்றுகின்றன.
ஆதிச்சநல்லூரிலும் புதுச்சேரிப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்ட
புதைபொருள்களுள் பல சைப்ரஸ் தீவிலுள்ள ‘என்கோமி’ என்னும்
இடத்திலும், பாலஸ்தீனத்திலுள்ள காஸா, ஜெரார் என்னும் இடங்களிலும்
கண்டெடுக்கப்பட்ட புதைபொருள்களைப் போலவே காணப்படுகின்றன.
இவற்றையெல்லாங் கொண்டு பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகளையும்
குடிப் பெயர்ச்சிகளையும் ஒருவாறு நுனித்தறியலாம்.

     சங்க காலம் : இக்காலத்து மக்களின் வாழ்க்கை முறைகளையும்
பண்பாடுகளையும் அறிந்துகொள்வதற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும்
பயன்படுகின்றன. அவற்றில் மன்னர்களின் பெயர்கள் பல காணப்படுகின்றன
வாயினும் அவர்கள் வாழ்ந்த காலத்தை அறிந்துகொள்வதற்குக் கல்வெட்டுகள்
காணப்படவில்லை. தமிழகத்தில் சில இடங்களில் ரோமாபுரி நாணயங்கள்
கிடைத்துள்ளன. அரிக்கமேட்டு அகழ்வாராய்ச்சியில்