பக்கம் எண் :

தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்5

கி.பி.முதல், இரண்டாம் நூற்றாண்டு ரோமாபுரி நாணயங்கள் கிடைத்துள்ளன.
அந் நூற்றாண்டுகளில் தமிழகத்துக்கும் ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று
வந்த செழிப்பான வாணிகத்துக்கு அவை சான்று பகர்கின்றன. இவ்
வாணிகத்தைப் பற்றிய சில அரிய செய்திகளை ‘எரித்திரியக் கடலின்
பெரிப்ளூஸ்’ (Periplus of the Erithraean Sea) என்னும் ஒரு கிரேக்க
நூலின் மூலமாகவும் அறிகின்றோம். பழம் பாண்டிய மன்னரின் நாணயங்கள்
சில சதுரவடிவிலும், நீண்டசதுர வடிவிலும் கிடைத்துள்ளன. இவற்றில் ஒருபுறம்
மீன் சின்னமும், பின்புறம் யானை அல்லது காளைமாட்டுச் சின்னமும்
பொறிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு.இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி.
இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவில்
வெளியிடப்பட்டிருக்கவேண்டும் எனத் தெரிகின்றது. பூம்புகாரில்
அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அவற்றைக்கொண்டு சில வரலாற்றுக்
குறிப்புகளும் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன.

     பல்லவர் காலம் : சங்க காலம் முடிவடைந்த பிறகு சுமார் முந்நூறு
ஆண்டுக்காலம் தமிழகத்தில் என்ன நேர்ந்தது என்று அறிய முடியவில்லை.
தமிழக வரலாற்றில் இதை ஓர் இருண்ட காலம் என்று குறிப்பிடுவதுண்டு. அக்
காலத்தில் நிகழ்ந்த செய்திகளுக்கு உடன்காலச் சான்றுகள் கிடைத்திலவேனும்,
அம்மூன்று நூற்றாண்டுகளில் தமிழகத்தில் மாபெரும் அரசியல், சமய, மொழி
மாறுதல்கள் தோன்றி, தமிழரின் வாழ்வையும் நாகரிகத்தையும் பல புதிய
திருப்பங்கட்கு உட்படுத்தின என்பதை ஊகித்தறியலாம். அவ்விருண்ட
காலத்தில் களப்பிரரால் ஏற்பட்ட அரசியல் மாறுதலுக்கு வேள்விக்குடிச்
செப்பேடுகள் (கி.பி. 768) சான்று பகர்கின்றன. அக் களப்பிரர் காலத்தில்
சமண பௌத்த சமயங்கள் தமிழகத்தில் மிகப் பெருமளவு வளர்ச்சியுற்றன.
மதுரையில் சமண முனிவர் வச்சிரநந்தி என்பார் தமிழ்ச்சங்கம் ஒன்றைத்
தோற்றுவித்து அதன் மூலம் சமண சமய இலக்கியங்களைத் தமிழில் பெருக்கி
அதற்கு வளமூட்டினார். சோழ நாட்டில் அச்சுத விக்கந்தன் என்ற பௌத்த
மன்னன் பௌத்த விகாரைகளை அமைத்தும், பௌத்த சமய நூல்களை
இயற்றுவித்தும் பௌத்த சமயத்தின் வளர்ச்சியை ஊக்குவித்துக்
கொண்டிருந்தான். அவன் ‘களப்ப குல’த்தைச் சார்ந்தவன். களப்பிரரைப்பற்றி
அறிவதற்குக் கன்னட நாட்டுக் கல்வெட்டுகள் சிலவும் பயன்படுகின்றன. சிலர்
வேறு கருத்துகளை வெளியிட்ட போதும் களப்பிரர் கன்னட
நாட்டிலிருந்ததாகவே தோன்றுகின்றது.