தமிழகத்துக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கல்வெட்டுகள் தமிழகத்தில் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் காணப்படுகின்றன. பிராமிக் கல்வெட்டுகள் என்று கருதப்பட்டுவந்த இவற்றைச் சுமார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரையுள்ள காலத்தைச் சார்ந்தவையெனக் கருதலாம். இவை பெரும்பாலும், தென் ஆர்க்காடு, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், கேரள நாட்டின் மேற்குப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. குறிப்பாகத் திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, சித்தன்னவாசல், புகலூர், சிங்கவரம் (ஸ்ரீநாதர்குன்று) ஆகிய ஊர்களில் இவற்றை இன்றும் காணலாம். இவை தவிர, பெயர் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் அரிக்கமேட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து யாது என்பது பற்றிக் கருத்து வேற்றுமைகள் உள. அதை அசோக எழுத்து அல்லது ஒருதர மாறுபட்ட பிராமி என்று முன்னாள் ஆராய்ச்சியாளர் பலரும் கருதினர். ஆனால், தற்போதைய கருத்து வேறுபட்டுள்ளது. அது பிராமி எழுத்தன்று என்றும் தாமிளி அல்லது திராவிடி என்ற லிபி எனவும் ஒரு சிலர் கருதுகின்றனர். இவற்றில் கையாண்டிருக்கும் மொழி பழைய தமிழேயாகும். பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னும் பற்பல கோயில்களில் கல்வெட்டுகள் தோன்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, மாமல்லபுரம், மகேந்திரவாடி, பல்லாவரம், மேலச்சேரி, மண்டகப்பட்டு, தாளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம் ஆகியவற்றிலுள்ள கோயில்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் கையாளப்பட்ட லிபி பல்லவ கிரந்தம் எனப்படுவது ; அதனைப் பிராமியைச் சார்ந்த ஒருவகை லிபியெனக் கருதலாம். இந்த லிபியில் சில மாற்றங்களடைந்த பல்லவ கிரந்த லிபியும், நாகரி எழுத்துகளும் கி.பி. ஏழாவது நூற்றாண்டில் ஆண்ட இராசசிம்மனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் செப்புப் பட்டயங்கள் சில தோன்றியுள்ளன. அவற்றுள் இருமொழிகளில் பொறிக்கப்பட்ட சாசனங்கள் மிகப் பல. இரண்டாம் சிம்மவர்மனின் (சுமார் கி.பி. 550) ஆறாம் ஆட்சி ஆண்டில் அளிக்கப்பட்ட பள்ளன்கோயில் செப்புப் பட்டயங்கள் முதன்முதலாக வடமொழியும் தமிழும் கலந்தவை. அவற்றைத் தொடர்ந்து பற்பல செப்புப் பட்டயங்கள் தோன்றலாயின. அவை கூரம், புல்லூர், பட்டத்தாள் மங்கலம், தண்டந் |