பக்கம் எண் :

மதுரை நாயக்கர்கள் 413

சொக்கநாதன் மனமுடைந்து 1682-ல் இவ்வுலகினின்றும் விடுதலை பெற்றான்.

     சொக்கநாதனுக்குப் பின்பு அவனுடைய மகன் ரங்ககிருஷ்ண முத்து
வீரப்பன் (நான்காம் வீரப்பன், 1682-9) பட்டமேற்றான். அவன் அரசி
மங்கம்மாள் வயிற்றில் பிறந்தவன். சொக்கநாத நாயக்கனின் வலுவற்ற ஆட்சி
முறையினால் அவனுடைய நாட்டின் சில பகுதிகளை மைசூர் மன்னனும்,
தஞ்சை மன்னன் சாம்பாஜியும் பறித்துக்கொண்டனர். எஞ்சிய பகுதியே
வீரப்பன் கைக்கு எட்டிற்று. அவன் முடிசூட்டிக் கொண்டபோது மதுரை

     நகரமே மைசூரின் பிடியில்தான் இருந்தது. எனினும், சாம்பாஜியின்
படையெடுப்புகள் பலவற்றுள் சிக்கித் திணறிக் கொண்டிருந்த மைசூர்
வேந்தன், இறுதியில் மதுரையைக் கைவிட்டு ஓடும் நிலை ஏற்பட்டது.
மைசூரின் தொல்லைகளிலிருந்து வீரப்பனும் விடுபட்டான். வீரப்பன்
இளமையும் நுண்ணறிவும் வாய்ந்தவன். அண்டை நாடுகளினால்
அலைக்கழிக்கப்பட்டிருந்த தன் நாட்டுக்கு அவன் புத்துயிரூட்டினான். மதுரை
மாநகரின் உரிமையையும், பெருமையையும் கண்போலக் காத்து வந்தான்.
அவனுடைய நெஞ்சுரத்தைப் பற்றியும், வீறாப்பைப் பற்றியும் ஒரு வரலாறு
வழங்கி வருகின்றது. அவன் காலத்தில் டில்லி பாதுஷாவானவன் தன்
செருப்புகளுள் ஒன்றைச் சிவிகையில் ஏற்றிப் படைகள் புடைசூழ அலங்காரக்
கோலத்தில் தனக்குத் திறை செலுத்தி வந்த நாடுகளுக்குத் திருவுலா
அனுப்புவது வழக்கம். மன்னர்கள் தம் நாட்டின் எல்லையிலேயே செருப்பை
வணங்கி வரவேற்று, நகருக்குள் படையினரை அழைத்துச் சென்று,
செருப்பைத் தம் அரியணையின்மேல் வைத்து மீண்டும் வணக்கம் செலுத்தி,
விலையுயர்ந்த பரிசிற் பொருள்களையும், திறையையும் டில்லி பாதுஷாவுக்காக
அளிப்பார்கள். ரங்ககிருஷ்ண முத்து வீரப்பன் காலத்திலும் டில்லிச் செருப்பு
ஏந்திய கோலம் ஒன்று திருச்சிராப்பள்ளிக்கு வந்து சேர்ந்தது. மன்னன் அதை
மதித்து வரவேற்க மறுத்து விட்டான். டில்லிப் படைத்தலைவர்கள் செருப்பைத்
தாங்கிக் கொண்டு கொலுமண்பத்துக்கு வந்தனர். வீரப்பன் மிக்க
இறுமாப்புடன் தன் அரியணைமேல் நாளோலக்கத்தில் வீற்றிருந்தான். டில்லி
வீரர்கள் அவன் திமிரைக் கண்டு சீறினார்கள். மன்னன் செருப்பை எடுத்துத்
தன் அடிகளின்கீழ் வைக்கும்படி டில்லி வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
கட்டளையை மீறுபவர்கள் தன் வாளுக்கு இரையாவர்கள் என்றும்
மருட்டினான். அவர்கள் நடுநடுங்கிச் செருப்பை எடுத்து அவனுடைய
அடிகளின்கீழ் வைத்தார்கள். வீரன்