பக்கம் எண் :

414தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

அதைத் தன் பாதம் ஒன்றில் அணிந்துகொண்டு ‘எமக்கு ஒரு சோடிச்
செருப்புகள் வேண்டியிருக்க, ஒற்றைச் செருப்பை அனுப்பிவைத்திருக்கும் உம்
மன்னன் அறிவிழந்தானோ?’ என்று கூறிக் கொக்கரித்தான். தன் வீரர்களைக்
கொண்டு முகலாயப் படையைக் கொன்று சிதறடித்தான். நடந்ததைக்
கேள்வியுற்ற டில்லி பாதுஷாவும் அதுமுதல் செருப்புக் கோலம்
அனுப்புவிப்பதை நிறுத்திக் கொண்டானாம்.

     வீரப்பன் அனைவருடனும் கலந்து பழகினான். அவன் மாறுவேடம்
பூண்டு நாடு சோதனை செய்து மக்களின் கண்ணீரை நேரில் துடைப்பான்.
நீதியையும் நேர்மையையும் பாராட்டிப் புரந்தான்; சமயச் சேற்றில் அழுந்தாது
நடுநிலைமையில் நின்றான்; கோயில்களுக்கும் சத்திரங்களுக்கும் பல
நன்கொடைகள் வழங்கினான். அவன் ஒரு மனைவிக்குமேல் மறு
மனைவியைத் தீண்டாத நோன்பு நோற்றவன். அந்தப்புரக் கேளிக்கைகளை
வெறுத்தான். அவன் செங்கோன்மையை மக்கள் தொடர்ந்து பெற்றுப்
பயனுறாதவாறு மரணதேவன் குறுக்கிட்டான். அவன் ஆயுள் 1689-ல்
முடிவடைந்தது.

     ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் இறந்தபோது அவன் மனைவி
கருவுற்றிருந்தாள்; ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொடுத்துவிட்டுத்
தீக்குளித்து உயிர்துறந்தாள். பிறந்த மூன்றாம் மாதத்திலேயே அக் குழந்தை
விசயரங்க சொக்கநாதன் என்ற பெயரில் அரியணை ஏற்றுவிக்கப்பட்டது.

     மங்கம்மாள் தன் பேரனுக்குப் பிரதிநிதியாக (Regent) இருந்து
அரசாட்சியை மேற்கொண்டாள். அவள் நுண்ணறிவும் வரும்பொருள்
உணர்வும் ஆட்சித் திறனும் கைவந்தவள். ஆட்சிப் பொறுப்புகளை ஏற்றுக்
கொண்டவுடன் டில்லி பாதுஷாவுக்குத் தன் பணிவைத் தெரிவித்துக்
கொண்டாள். தக்கணம் முழுவதையும் தன் குடையின்கீழ் ஆண்டு வந்த
அவுரங்கசீபு மதுரைச் சீமையின்மேல் பாய்ந்து வருவதற்கு நெடுநாள் ஆகாது
என்று அறிந்து மங்கம்மாள் முகலாய மன்னனுக்குப் பணிந்து தன் நாட்டையும்,
தன்னையும் அழிவினின்றும் காப்பாற்றிக் கொண்டாள். முகலாய பாதுஷாவின்
சேனாதிபதி சுல்பிகர் அலிகானுக்கு அளவற்ற விலையுயர்ந்த செல்வங்களை
வழங்கி, அவனுடைய துணையைப் பெற்றுத் தஞ்சை மன்னன்
கைப்பற்றியிருந்த மதுரை தேசத்தின் பகுதிகளை மீட்டுக் கொண்டாள்.
மராட்டியருக்கு அடிக்கடி இலஞ்சங் கொடுத்து அவர்களுடைய
தொல்லைகளுக்கு ஓர் எல்லை கட்டிவைத்தாள்.