பக்கம் எண் :

மதுரை நாயக்கர்கள் 415

     திறை செலுத்த மறுத்த கேரளத்து மன்னன் இரவிவர்மன் மேல்
மங்கம்மாள் படையெடுத்து (1697) வெற்றிவாகை சூடினாள். அவளுடைய
படைத்தலைவன் தளவாய் நரசிம்மன், அவனிடமிருந்து அளவிறந்த
பொன்னும், பொருளும், பெரிய பீரங்கிகளும் கவர்ந்து வந்தான்.

     ஜெசூட் பாதிரிகளின் கடிதங்களிலிருந்து நாயக்கர் ஆட்சி காலத்திய
செய்திகள் பலவற்றை அறியும் வாய்ப்புக் கிடைக்கின்றது. அவர்கள் கூறும்
செய்திகள் அவ்வளவும் அப்பட்டமான உண்மை என்று கூறமுடியாது.
கிறித்தவ சமயத்தைப் பரப்ப வந்த அவர்கள் இந்து மன்னரைப் பற்றியும்,
இந்துக்களின் சமூக வாழ்க்கையின் பல்வேறு கூறுபாடுகளைப் பற்றியும் தாம்
கண்டறிந்த அல்லது கேட்டறிந்த செய்திகளை மிகைப்படுத்தியும், திரித்தும்,
மறைத்தும் எழுதியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனினும், அவர்கள்
கூற்றில் ஓரளவு உண்மையையும் காணலாம்.

     நாயக்கர் ஆட்சியில் மன்னனும், அவனுடைய அமைச்சரும் மத்திய
அரசாங்கப் பொறுப்புகளையும் ஏற்றியிருந்தனர். நாடு பல பாளையங்களாகப்
பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பாளையத்துக்கும் பாளையக்காரன் ஒருவன்
தலைவனாக இருந்து அரசாங்கத்தை நடத்தி வந்தான். மன்னன்
அரசாங்கத்தின் தலைவனாகச் செயல்பட்டுவந்தான். அவனுடைய தலைமைச்
செயலாளன் அல்லது அமைச்சன் தளவாய் என்பவன் அரசாங்கத்தை
நடத்திவரும் பொறுப்புடன் படைத்தலைமைப் பொறுப்பையும் ஏற்று நடத்தி
வந்தான். எனவே, நாட்டின் குடிநலத்தைப் பேணும் பொறுப்புத் தளவாயின்
கைகளில் குவிந்திருந்தது. நாயக்கரின் முதல் தளவாயான அரியநாதன்
பிரதானியாகவும் (படைத்தலைவனாகவும்) செயல்பட்டுவந்தான்.
அரியநாதனுக்குப் பிறகு பொறுப்பேற்ற இராமப்பையன் என்ற தளவாய்
ஆற்றலிலும், புகழிலும், அரியநாதனுக்குச் சளைத்தவனல்லன். மங்கம்மாளுக்கு
அமைச்சு புரிந்த தளவாய் நரசப்பையன் ஜெசூட் பாதிரிகளின் பாராட்டைப்
பெற்றுள்ளான். இராயசம் (செயலாளன்) என்ற அலுவலன் தளவாய்க்கு
அடுத்து நின்றவன். இவனுக்கும் மன்னனிடம் செல்வாக்கு உண்டு.

பிற்கால மதுரை நாயக்கர்கள்

     மதுரை நாயக்கர்களுக்கு மறவர்களின் தலைவனான கிழவன் சேதுபதி
என்று அழைக்கப்பட்ட இரகுநாத சேதுபதியானவன்