பக்கம் எண் :

416தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

(1674-1710) தீராத தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன்
நாயக்கர்களுக்குத் திறை செலுத்த மறுத்தான். அது மட்டிலுமன்றி இராணி
மங்கம்மாள் தஞ்சாவூரின்மேல் போர் தொடுத்தபோது (1700) கிழவன் சேதுபதி
தஞ்சை மன்னன் ஷாஜியுடன் சேர்ந்துகொண்டான். அவனுடைய
ஆணவத்தைக் குலைக்கும்பொருட்டு இராணி மங்கம்மாள் மறவர்
நாட்டின்மேல் படையெடுத்தாள் (1702). ஆனால், அப் போர் அவளுக்குத்
தோல்வியில் முடிந்தது. அவளுடைய அமைச்சன் தளவாய் நரசப்பையன்
போரில் புண் பட்டிறந்தான். கிழவன் சேதுபதியின் கைகள் மேலும்
வலுவடைந்தன. அவன் இராமநாதபுரத்தில் பல கோட்டை கொத்தளங்கள்
அமைத்தான் ; பாதுகாப்பு அணிகள் நிறுவினான். இராமநாதபுரத்தின்மேல்
படையெடுத்து வந்த தஞ்சாவூர் மராட்டிய மன்னனைக் கிழவன் சேதுபதி
முறியடித்தான் (1709). அஃதுடன் அமையாமல் அவன் அறந்தாங்கிக்
கோட்டைகளையும் கைப்பற்றினான். மங்கம்மாளின் மேலாட்சியினின்றும்
நழுவிய இராமநாதபுரம் தனியொரு நாடாகவே இயங்கி வரலாயிற்று.

     இராமநாதபுரத்தில் கிறித்தவர்களின் சமயப் பிரசாரமும் மதமாற்றமும்
ஏறிக்கொண்டே போயின. ஆயிரக்கணக்கான மக்கள் கிறித்தவர்களாக
மாறிவந்தனர். கிறித்தவர்கள் இந்துக் கோயில்களையும் தெய்வங்களையும்
எள்ளி நகையாடினர் ; இலிங்க உருவங்களை உடைத்தார்கள். இந்துக்களின்
நெஞ்சம் புண்பட்டது. பல பல நூற்றாண்டுகளாகப் பயின்று வந்த இந்து
சமயமும், கோயில் வழிபாடுகளும், இந்துப் பண்பாடும் அழிந்து
மறைந்துவிடுமே என்று எண்ணிக் குடிமக்களும் கிழவன் சேதுபதியும் அஞ்சி
நடுங்கினர். கிறித்தவப் பாதிரி பிரிட்டோ (Father John de Britto) சமயப்
பிரசாரங்களிலும், இந்துக்களைக் கிறித்தவர்களாக மாற்றுவதிலும் வெகு
முனைப்புடன் பணியாற்றிவந்தார். பல்லாயிரம் இந்துக்கள் அவரால்
கிறித்தவர்களாக மாறினர். இப் பாதிரியின் ஏற்பாடுகளில் தடியதேவன்
என்பான் ஒருவனும் சேர்ந்தான் ; கிழவன் சேதுபதியின் தம்பி மகளை
மணந்திருந்தான். தடியதேவன் ‘ஞான ஸ்நானம்’ பெற்றுக்கொண்டதும் தன்
இளம் மனைவியைத் தள்ளிவிட்டான். அவள் கிழவன் சேதுபதியிடம் தன்
கணவனின் நடத்தையைப் பற்றி முறையிட்டுக்கொண்டாள். தன்
குடும்பத்தையே குலைக்குமளவுக்குப் பிரிட்டோவின் பணிகள் வளர்ந்து
விட்டதையறிந்து கிழவன் வெகுண்டான். தன் சினத்தை அவன் கிறித்தவ
ஆலயங்களின்மேல் கொட்டினான். கிறித்தவ ஆலயங்கள்