இடித்து நிரவப்பட்டன. கிழவன் ஆணையின்மேல் பாதிரி பிரிட்டோவும் கொல்லப்பட்டிருந்தார். ஏனைய பாதிரிகளும் பல கொடுமைகளுக்குள் ளானார்கள். கிறித்தவர்களை ஒறுப்பதில் கிழவன் வெகு முனைப்புடன் செயல்பட்டான். கிழவன் சேதுபதியின் கொடுமைகளுக்குள்ளாகித் துன்புற்று வந்த கிறித்தவர்கள் மக்களிடையே ஒரு புரட்டைத் திரித்துவிட்டார்கள். சமாதி செய்யப்பட்டிருந்த பிரிட்டோ பாதிரியின் சடலம் பல அற்புதங்களை இயற்றுகின்றதென்று அவர்கள் ஓயாமல் மக்களுக்கு ஓதிவந்தார்கள். மக்கள் மனமும் கரையலாயிற்று. கிழவன் சேதுபதி இறந்த பிறகு அவனுக்குப் பின் அரியணை ஏறிய வடுகநாத தேவனும் கிறித்தவர்கட்கு ஆதரவு அளித்து வரலானான். மதுரை தேசத்தில் ராணி மங்கம்மாள் கிறித்தவர்களிடம் அன்பாகவே நடந்துகொண்டாள். ஆகவே கிறித்தவக் குடிமக்களும், பாதிரிகளும் அவளிடம் இணக்கமாக வாழ்ந்து வந்தனர். மங்கம்மாள் அரசியல் நுண்ணறிவும், வினைத்திட்பமும், மடியின்மையும் வாய்க்கப் பெற்றவள். இஸ்லாமியக் குடிமக்களையும் போற்றி வந்தாள். அவள் மசூதிகள் கட்டுவதற்கும், தர்க்காக்கள் அமைப்பதற்கும் பல தானங்கள் வழங்கினாள். இந்து சமயத் தொண்டுகளிலும் அயரா ஊக்கங்கொண்டிருந்தாள். மங்கம்மாள் நல்ல சாலைகள் அமைத்தாள் ; சத்திரங்கள் கட்டினாள் ; சாலையோரக் கிணறுகள் வெட்டினாள் ; தண்ணீர்ப் பந்தல்கள் ஏற்படுத்தினாள் ; உழவுத் தொழிலின் வசதிக்காகப் பல பாசன வசதிகள் செய்துகொடுத்தாள். மங்கம்மாளின் இறுதி நாள்கள் இனிமையாகக் கழியவில்லை. அவளுடைய பேரன் பொறுப்பு வயதை எட்டியபோது அவனுக்கு அரிசுமையை மாற்றிக்கொடுக்க மறுத்தாள். அதனால் அவன் அவளை வெறுத்தான். பதினெட்டாண்டுகள் ஆட்சி நடத்தி வந்து 1706-ல் அவள் காலமானாள். மங்கம்மாளின் பேரனும், ரங்ககிருஷ்ணனின் மகனுமான விசயரங்க சொக்கநாதன் 1706-ல் முடிசூட்டிக் கொண்டான் ; அவன் ஆட்சி முவதிலும் நாட்டில் துன்பங்களும் தொல்லைகளும் மலிந்தன. நாடு சீர்குலைந்தது. மன்னனின் கொடுங்கோன்மையின்கீழ்க் குடிகள் வாட்டமுற லாயினர். மக்கள் ஆங்காங்குக் கிளர்ச்சிகளில் இறங்கினர். தாங்க முடியாத வரிச் சுமையை எதிர்த்துக் கோயில் பணியாள் ஒருவன் கோயில் கோபுரத்தின் மேலிருந்து கீழே குதித்து உயிர் துறந்தான் என்று கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகின்றது (1710).1 1. Ep. Rep. 6/25. |