இராமநாதபுரச் சீமையில் கிழவன் சேதுபதி 1710-ல் காலமானான். ஆட்சித் திறனும் அரசியல் சூழ்ச்சியும் வாய்ந்த அவனுடைய வாணாள் முடிவுற்றவுடனே விசயரகுநாதன் சேதுபதியானான். அவன் தன் குடிமக்களின் அன்பைப் பெற்றான் ; மிக்க சமயப் பற்றுடையவனாக இருந்தான். அவன் அடிக்கடி இராமேசுரம் யாத்திரை சென்று வருவது வழக்கம். இராமேசுரம் கோயிலுக்குப் பல நன்கொடைகள் வழங்கினான். விசயரகுநாத சேதுபதி இளகிய உள்ளமுடையவன் ; சமரசம் பாராட்டியவன் ; கிறித்தவர்களிடம் பரிவு காட்டினான். அதனால் மறவர் சீமையில் 1714-15 ஆண்டுகளில் கிறித்தவ சமயம் செழித்து வளர்ந்தது. விசயரகுநாதனுக்குப் பின் அரசுரிமைக் கிளர்ச்சிகள் எழுந்தன. பவானிசங்கரன் என்பவனும், தாண்டதேவன் என்பவனும் அரியணைக்குப் போட்டியிட்டனர். இப் போட்டியினால் பல போர்கள் ஏற்பட்டன. அப் போர்களில் மதுரை மன்னனும், தஞ்சாவூர் மன்னனும் கலந்துகொண்டனர். தாண்டதேவன் போரில் உயிர் துறந்தான். பவானி சங்கரனே சேதுபதியாக அரியணை ஏறினான். பவானி சங்கரனைப் பிரபுக்களும் குடிமக்களும் வெறுத்தனர். தஞ்சை மன்னன் படையெடுத்தான். உறையூரில் நடந்த போரில் (1729) பவானி சங்கரன் தோற்றுப் பகைவரால் சிறைபிடிக்கப்பட்டான். இராமநாதபுரம் பங்கு போடப்பட்டது. ஒரு பங்கு தஞ்சாவூருக்குக் கிடைத்தது. எஞ்சிய பங்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அவற்றுள் ஒரு பங்கு இராமநாதபுரம் சீமை ; அதற்குக் கட்டையதேவன் என்பவன் குமார முத்து விசயரகுநாத சேதுபதி என்ற பெயரில் அரசனானான். மற்றொரு பங்கு சிவகங்கைச் சீமை ; அதற்கு ஒரு பாளையக்காரன் மன்னனானான். மதுரை நாயக்கன் விசயரங்க சொக்கநாதன் அடிக்கடி கோயில் குளங்களுக்கு யாத்திரை போவதையே தொழிலாகக் கொண்டிருந்தான். அரசாங்கப் பண்டாரத்தைக் கோயில்களுக்கும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் செலவிட்டான். அவனுக்கு உள்ளத் திட்பமும் பொறுப்புணர்ச்சியும் இல்லாக் காரணத்தால், அவனுடைய அமைச்சர்களான நரசப்பையனும் வேங்கட ராகவாசாரியனும் அரசாங்க வருவாய் அனைத்தையும் கொள்ளைகொண்டனர். விசயரங்க சொக்கநாதனிடம் திருமணத் தொடர்புகொள்ளும் விருப்பத்துடன் சிங்களத்து மன்னன் தூதனுப்பினான். நாயக்கன் தான் உயர்குடியென்றும், சிங்களவன் தாழ்குடி என்றும் கூறி, அத் தொடர்பை மறுத்தான். அவன் காலத்தில் நாடு சரிவுற்றது. 1732-ல் காலமானான். |