பக்கம் எண் :

மதுரை நாயக்கர்கள் 419

மீனாட்சி (1732-36)

     விசயரங்க சொக்கநாதனுக்கு ஆண்மகவு பிறக்கவில்லை. ஆகவே அவன்
அரசி மீனாட்சியே ஆட்சிப் பொறுப்புகளை மேற்கொண்டாள் (1732). பங்காரு
திருமலை என்பவன் மகன் விசயகுமாரனைச் சுவீகாரம் எடுத்துக் கொண்டாள்.
ஆனால், தன் மகன் அரசுரிமை பெற்றுப் பட்டங் கட்டிக்கொள்ளுவது
தந்தைக்கு விருப்பமில்லைபோலும். பங்காரு திருமலை நாயக்கனும் தளவாய்
வேங்கடாசாரியனும் மீனாட்சியை அரியணையினின்றும் இறக்குவதற்குப் பல
சூழ்ச்சிகள் மேற்கொண்டனர். அதே சமயம் ஆர்க்காட்டு நவாபானவன்
மதுரையையும் தஞ்சாவூரையும் தாக்கி அழிக்குமாறும், அந்தச்
சீமைகளிலிருந்து திறைகவர்ந்து வருமாறும் தன் மகன் சப்தர் அலியையும்
மருமகன் சந்தா சாயபுவையும் மிகப் பெரும்படைக்குத் தலைவராக ஏவினான்.
அவர்களும் திருச்சிராப்பள்ளிச் சீமையை நெருங்கினர். தானாக விளைந்த
இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நன்றிகெட்ட பங்காரு நாயக்கன்
தயங்கவில்லை. அவன் சப்தர் அலிக்கு இலஞ்சத்தை வாரிக்கொடுத்து
அவனைத் தன் கட்சிக்கு மடக்கிக் கொண்டான். மீனாட்சியின் கடுங்காவலில்
இருந்துவந்த திருச்சிராப்பள்ளிக் கோட்டையைத் தாக்கித் தகர்த்தல் எளிதன்று
என்பதைச் சப்தர் அலி அறிவான். ஆகவே, பங்காரு நாயக்கனுக்கும்
மீனாட்சிக்கும் இடையே நடந்துகொண்டிருந்த அரசுரிமைப் பூசல்களில் தான்
தலையிட்டு விசாரித்துத் தீர்ப்புக் கூறுவதாக அவன் வாக்களித்தான். ஆனால்,
மீனாட்சி அவனுடைய சொற்களை நம்பி ஏமாறவில்லை. எனவே, சப்தர் அலி
பங்காரு திருமலையின் கட்சியில் சேர்ந்துகொண்டு சந்தா சாயபுவினிடம் இவ்
வழக்கை ஒப்படைத்தான். சந்தா சாயபுவுடன் உடன்படிக்கை ஒன்று செய்து
கொள்வதற்காக மீனாட்சி விரைந்தாள். அவ்விருவருக்குள் ஏற்பட்ட
உடன்படிக்கையின்படி மீனாட்சி வழங்கிய ஒரு கோடி ரூபா இலஞ்சத்தை
ஏற்றுக்கொண்டு திருச்சிராப்பள்ளியை விட்டுப் போய்விடுவதாகச் சந்தா சாயபு
கொரானின்மேல் சத்தியம் செய்து வாக்குக் கொடுத்தான் ; அந்நகரை
விட்டுவிட்டு மதுரையை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான்.
அதற்குள் பங்காரு நாயக்கன் மீனாட்சியுடன் உடன்பாடாக இருப்பதாக
மீனாட்சியிடம் கூறி ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொடுத்தான். அவள் பங்காரு
நாயக்கன், தன்னுடைய சுவீகார மகன் இருவரையுமே மதுரையைக்
காப்பாற்றுமாறு அனுப்பிவைத்தாள். தன் எண்ணம் நிறைவேறாமற் போனதைக்
கண்ட சந்தா சாயபுவும் மனம் புழுங்கி ஆர்க்காடு திரும்பினான். பெரும்
படையொன்றைத் திரட்டிக்கொண்டு அவன் மீண்டும் ஒருமுறை
திருச்சிராப்பள்ளியின்மேல் பாய்ந்து வந்தான் (1736). அவன்