மீனாட்சியுடன் கலந்து இச்சகம் பேசி, அவளுடைய பகையைத் தான் வென்று அவளுக்குத் தனியரசு நல்குவதாக வாக்குறுதி செய்துகொடுத்து, அவளைத் தன் வஞ்சக வலைக்குள் போட்டுக் கொண்டான். அப் பேதையும் அவனுடைய சொற்களில் மயங்கித் தன் ஆட்சி உரிமை முழுவதையும் சந்தா சாயபுவினிடமே ஒப்படைத்து விட்டாள். தான் திருச்சிராப்பள்ளிச் சீமையின் ஆட்சியை ஏற்றுக்கொண்டவுடனே சந்தா சாயபுவானவன் 80,000 குதிரைகள் அடங்கிய குதிரைப் படையொன்றையும் காலாட்படை யொன்றையும், மீனாட்சிக்கு உடன்பட்டவர்களான கோவிந்தையன், இராமனையன் ஆகிய இருவரின் தலைமையில் திண்டுக்கல்லை நோக்கி ஏவினான். திண்டுக்கல் கோட்டை பங்காரு திருமலை நாயக்கன் வசம் இருந்தது. பங்காரு திருமலை தன்னால் இயன்றவரை அப் படைகளை எதிர்த்துப் போரிட்டான். அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற பெரிய போரில் அவனுடைய ஆற்றல் சரிந்தது. திண்டுக்கல் கோட்டையும் வீழ்ந்தது. பங்காரு திருமலை கோட்டையைக் கைவிட்டுச் சிவகங்கைக்கு ஓடி ஒளிந்தான். சந்தா சாயபு தன்முன் எதிர்ப்பற்று விரிந்து கிடந்த மதுரை தேசம் முழுவதையுமே தனக்கு உரிமையாக்கிக் கொண்டான். மீனாட்சிக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை மீறினான். அரசி மீனாட்சியை அவளுடைய அரண்மனையிலேயே சிறையிட்டு வைத்தான். தனக்கு வந்த அவமானத்தைத் தாங்காதவளாய் மீனாட்சி நஞ்சுண்டு மாண்டாள் (1736). பங்காரு திருமலையின் அழுக்காற்றுக்கும் நாட்டுத் துரோகத்துக்கும் பலன் கைமேல் கிடைத்தது. அவன் நவாபு அன்வாருதீன் கைகளால் கொலையுண்டு மாண்டான். அவன் மகனான விசயகுமாரன் மதுரையை ஆளும் வாய்ப்பை இழந்து, விதி தன்னை வெருட்டிவர, சிவகங்கைச் சீமையில் அடைக்கலம் புகுந்தான். அதனுடன் மதுரை நாயக்கர் பரம்பரையும் மறைந்துபோயிற்று. |