தனிச் சிறப்புகளையும், செல்வாக்கையுங் கண்டும் மனப்புகைச்சல் இன்றியே ஏனைய குடிமக்கள் அவர்களுடன் ஒத்து வாழ்ந்தார்கள் என்று சில வரலாற்று ஆசிரியர் கருதுவர். அவர்களுடைய கருத்துப் பொருத்தமானதன்று. பிராமணர்கள் நேர்மையும், கூர்த்த அறிவும், கணிதப் புலமையும், உடற்கட்டும் வாய்ந்தவர்கள் என்றும், ஆனால் அவர்கள் இறுமாப்புடையவர்களாகி மக்களின் வெறுப்புக்கு ஆளானார்கள் என்றும் போர்ச்சுகீசிய வணிகர் ஒருவர் எழுதியுள்ளார் (கி.பி. 1537). அதை நோக்குமிடத்துக் குடிமக்கள் அவர்களிடம் முழுக்க முழுக்க நல்லெண்ணமும் நல்லுறவும் கொண்டிருந்திருக்க முடியாது என்று ஊகிக்க இடமேற்படுகின்றது. முஸ்லிம்கள் தமிழகத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டதெனத் தெரிகின்றது. மாலிக்காபூர் படையெடுத்து வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் நுழைந்து பாண்டி மன்னர்களின் படைத் தொழிலிலும் ஈடுபடலானார்கள். முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் (1216-38) ஒரு கழனிக்குத் ‘துலுக்கராயன் குழி’ என்று பெயர் வழங்கி வந்துள்ளது.4 மற்றும் அரபியர்கள், யூதர்கள், பார்சியர்கள், சீனர்கள், மலேயர்கள், போர்ச்சுகீசியர்கள், வேறு பல ஐரோப்பிய நாட்டினர் ஆகியவர்கள் தமிழகத்துக்கு வந்து பல தொழில்களில் ஈடுபடலானார்கள். பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்சியர்கள் தமிழகத்தில் காணப்பட்டனர் என்று ஜோர்டானீஸ் பாதிரியார் கூறுகின்றார். பொருளாதாரத்தின் அடிப்படையில் குலங்கள் நூற்றுக்கணக்கில் பெருகி வந்தன. சில குலங்கள் சிறுசிறு வகுப்புகளாகவும் பிரிந்து போனதுண்டு. கம்மாளர்கள் (கண்மாளர்கள்) பொற்கொல்லர் (தட்டார்)களாகவும், தச்சர்களாகவும், கருமார்களாகவும், கன்னார்களாகவும், சிற்பிகளாகவும் பிரிந்தார்கள். இவ் வகுப்புகளுக்கிடையே விருதுகள், நடைமுறை உரிமைகள் ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி சச்சரவுகள் நேர்ந்ததுண்டு. ஒருமுறை மதுரை வீரப்ப நாயக்கன் தலையிட்டு இவர்களுடைய சச்சரவு ஒன்றைத் தீர்த்துவைத்தான் ; நல்லுறவு உடன்படிக்கை ஒன்றையும் ஏற்படுத்தினான்.5 கருமார்களுக்கும், தச்சர்களுக்கும், தட்டார்களுக்கும் நிலங்கள் தானமாக அளிக்கப் 4. I. P. S. No. 304. 5. Ep. Rep. 309/16; Ep. Rep. 378/16. |