முதலிகள் என்று குலப் பட்டப் பெயர் வழங்கிற்று.14 தேவரடியார்களில் ஒரு பிரிவினர் இக் குலத்தைச் சார்ந்தவர்களாகவும் இருந்தனர்.15 கைக்கோளருடன் கம்மாளர்கள் சம உரிமைக்காகப் போராடியுள்ளனர். கைக்கோளர்கள் பாவாடை விரித்தல், பரிவட்டம் தாங்குதல் போன்ற உரிமைகள் வழங்கப் பெற்றிருந்தனர். அவற்றைக் கம்மாளரும் வற்புறுத்திப் பெற்றார்கள்.16 நெசவுத் தொழிலின் இன்றியமையாமையை உணர்ந்து கைக்கோளர்கள் ஊரில் புதிதாகக் குடியமர்த்தப்பட்டதும், அவர்கள்மேல் விதிக்கப்பட்டிருந்த இடங்கை வரியினின்றும் அவர்கட்கு விலக்கு அளிக்கப்பட்டதும் கல்வெட்டுச் செய்திகளினின்றும் வெளியாகின்றன.17 வட ஆர்க்காடு மாவட்டத்தில் இப்போது வடபாதிமங்கலம் என்று வழங்கும் மாதேவி மங்கலத்தில் வாழ்ந்திருந்த கைக்கோளர்கள், செட்டிகள், கச்சவட வணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடிகள், செக்கு வணிகர், உறைகாரார் ஆகியவர்கள் ஒன்றுகூடி, தனிநின்று வென்றான் நல்லூர், மாதேவிமங்கலம் ஆகிய இரு ஊர்களையும் ‘அஞ்சினான் புகலிட’மாக நிறுவினார்கள்.18 அரசு அல்லது மேற்குலத்தினர் இழைத்த கொடுமை யினின்றும் தப்பிய குடிகள் இந்த இடத்தில் அடைக்கலம் புகலாம் ; அவர்கட்கு ஊறு ஒன்றும் விளையாது. சேனையங்காடி என்னும் சொல் சேனைகள் நிறுத்தப்பட்டிருந்த இடங்களில் கடை திறந்து வாணிகம் செய்தவர்களையும், கோயிலங்காடி என்னும் சொல் கோயில்களில் கடை வைத்திருந்தவர்களையும் குறிக்கும் போலும். கைக்கோளரின் உரிமைகள், விருதுகள் முதலியவை கல்லில் பொறித்து வைக்கப்பட்டன. ஒரு முறை அத்தகைய கல்வெட்டு ஒன்றில் இருந்த எழுத்துகளை இலைவணிகர்கள் அழித்துவிட்டார்கள். அதனால் கைக்கோளர்களும் தேவாங்கர்களும் சினமுற்று ஊரைவிட்டே போய்விட்டார்கள். ஆகவே, அவர்களுடைய சினத்தை மாற்றும்பொருட்டு அழிக்கப்பட்ட சாசனத்தின் படியொன்று மீண்டும் நிறுத்தப்பட்டது.19 திருவண்ணாமலையில் இரு தெருக்களில் கைக்கோளர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குச் சங்கு, தண்டு, ஆனை, சாமரம் ஆகிய விருதுகளும், வலங்கைக்கு உள்ள வரிசைகள் அத்தனையும் நடத்தப் பட்டன.20 14. Ep. Rep. 292/28-29. 15. Ep. Rep. 276/28-29. 16. Ep. Rep. 293/28-29 17. Ep. Rep. 207/29-30. 18. Ep. Rep. 62/33-34. 19. Ep. Rep. 201/36-37. 20. S. I. I. VIII. No. 155. |