கைக்கோளருள் மூத்தவன் பெற்ற கைக்கோளர் என்று ஒரு பிரிவும் இருந்து வந்தது.21 குதிரைச் செட்டிகள் என்ற ஒரு குலத்தினர் குதிரை வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்.22 அவர்கட்கு நாயக்கர்கள் என்றும் ஒரு பட்டப்பெயர் உண்டு. தென்னிந்தியத் துறைமுகங்களில் அயல்நாட்டுக் குதிரைகள் கப்பல்களில் வந்து இறங்கின. இவற்றை வாங்கி விற்ற குதிரைச் செட்டிகள் சங்கம் ஒன்று மலைமண்டலத்தில் தன் அலுவலகத்தை அமைத்திருந்தது. இதைப் பற்றிய செய்திகள் சில கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் காஞ்சிபுரத்துக் கல்வெட்டுகளினின்றும் தெரியவருகின்றன. வடஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுக்கா குன்றத்தூர் முதலிய கிராமங்களில் ‘பூமிதேவபுத்திரர்’ என்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர் எனத் தெரிகின்றது. குன்றத்தூரில் வலங்கை-இடங்கை மீகாம சமாஜம் என்று ஒரு நிறுவனம் இருந்ததாகவும், அதன் கணக்குகளை எழுத ஒரு கணக்குப்பிள்ளை அமர்த்தப்பட்டிருந்தார் என்றும் அறிகின்றோம்.23 வடஆர்க்காடு மாவட்டத்தில் படைவீட்டில் நந்தகோபாலர், வண்துவராபதி என்ற குலங்கள் இருந்தன. அவற்றைச் சார்ந்தவர்கள் சோழ மண்டலத்திலும், மலைநாட்டிலும் வாழ்ந்திருந்தனர். அவர்கள் மன்றாடிகள் (இடையர்). நந்தகோபாலர் பிரிவுக்குள் புகட் கோபாலர், வீரகந்த கோபாலர், விசயகந்த கோபாலர் என்ற உட்பிரிவுகள் இருந்தன.24 மேலும் பல குலங்கள் கல்வெட்டுச் செய்திகளில் குறிக்கப்பட்டுள்ளன. கம்பளத்தார்,25 கார்காத்த வேளாளர்,26 ரெட்டிகள்,27 கரைக்காட்டார்,28 கடிகாரத்து முதலியார்29 ஆகிய குலத்தார்களும் சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். வட ஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில் அரசாட்சி புரிந்து வந்த குறுநில மன்னர்களான சம்புவராயர்கள் வன்னிய குலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர்.30 21. Ep. Rep. 581/2o. Ep. Rep. 584/20 22. Ep. Rep. 77/36-37. 23. Ep. Rep. 91/41-42. Ep. Rep. 101/41-42. 24. Ep. Rep. 81 to 83/ 40-41. 25. Ep. Rep. 375/39-40. 26. Ep. Rep. 9/45-46. 27. Ep. Rep. 23/45-46. 28. Ep. Rep. 25/45-46. 29. Ep. Rep. 59/45-46. 30. Ep. Ind. XXVIII. No. 12. |