பக்கம் எண் :

426தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

வலங்கை - இடங்கைப் பூசல்கள்

     வலங்கை-இடங்கை வகுப்பினரைப்பற்றி இந் நூற்றாண்டுகளில் பல
விரிவான செய்திகளை அறிகின்றோம். இடங்கை வரி என்றும் வலங்கை
வரியென்றும் வரிகள் விதிக்கப்பட்டு வந்தன.31 இவ்விரு வகுப்புகளில்
சேர்க்கப்பட்டிருந்த தனித்தனி 98 குலத்தினரைப் பற்றிய விளக்கம் ஒன்று
அச்சுத தேவராளியரின் கல்வெட்டு ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது.32
இவ்விரு வகுப்பினரிடையே அடிக்கடி சச்சரவுகள் நேரிட்டன. இரு
வகுப்பினரிடையேயும் உயிர்ச்சேதம் நேர்ந்துள்ளது. இத்தகைய வகுப்புக்
கலகம் ஒன்று முதலாம் வீரவிருபாட்சன் காலத்தில் மலையம்பட்டில்
விளைந்தது ;33 பிறகு அவர்களுக்குள் உடன்படிக்கையும் ஏற்பட்டது. வலங்கை
வகுப்பினரின் தலைவன் ஒருக்காப் புலியுடையான் என்பவனை, வருதன்பட்டி
இடங்கை வகுப்பைச் சார்ந்த தனிப் புலித்தேவன் என்பவன் கொன்றுவிட்டான்.
அதனால் இடங்கை வகுப்பினருக்கு ஒருக்காப் புலியன் கொடுத்துவந்த
தொல்லைகள் நீங்கின. வீரப்பநாயக்கரும் கண்மாளக் குலத்தைச் சார்ந்த ஐந்து
பிரிவினரும் அவனைக் கொன்ற இடங்கை வீரனுக்குச் சில சிறப்புரிமைகள்
வழங்கி, அதற்கான வரிசை மானியப் பட்டயத்தையும் உபயசமயப்
பட்டயத்தையும் எழுதிக்கொடுத்தனர்.34

     சில சமயம் இடங்கையினரும் வலங்கையினரும் ஒற்றுமையாக நின்று
தமக்கு இடையூறு செய்தவர்களை எதிர்த்துத் தமக்குப் பொதுவில் நன்மை
பயக்கக்கூடிய ஒப்பந்தங்களைச் செய்து கொடுத்துள்ளனர்.35 இடங்கை
மாசேனையார் என்பவர்கள் சந்திரகிரியில் வாழ்ந்து வந்தனர். அவர்கள்மேல்
விதிக்கப்பட்ட இடங்கை வரியை வேளிருஞ்சேரி என்னும் இடத்தில் இருந்த
தட்சிணாமூர்த்தி, அழகிய பெருமாள் கோயில்களின் திருப்பணிக்கென
ஒதுக்கிக் கொடுத்தார்கள்.36

பறையர்கள்

     விசயநகர அரசாட்சியின்கீழ்ப் பறையரின் நிலை தாழ்ந்து கொண்டே
வந்தது. அவர்களுக்கெனச் சேரிகள் அமைக்கப்பட்டிருந்தன. சில
சிறப்புரிமைகளையும் அவர்கள் போராடிப் பெற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில்
பதினேழாம் நூற்றாண்டில்

     31. Ep. Rep. go 492/1902, p. 43.
     32. Ep. Rep. go 503/1907. p. 17.
     33. Ep. Rep. 115/191.
     34. Ep. Rep. go 1936-37 Cop. p1. I.
     35. Ep. Rep. 490/37-38
     36. Ep. Rep. 115/42-43.