தொடக்க நிலையிலேயே உள்ளது; முடிவு பெறவில்லை. அப் புதைவுகளில் கண்டெடுக்கப்பட்ட பல பொருள்களுக்கு விளக்கங் காணவேண்டியுள்ளது. இன்னும் பல புதைவுகளின் ஆராய்ச்சி முற்றுப்பெறவில்லை. எனவே, இந்நிலையில், தென்னிந்தியப் புதைவுகளில் கண்டெடுக்கப்பட்ட பானையோட்டு எழுத்துகளுக்கும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் பொருத்தங் காண முயல்வது நற்பயன் அளிக்க வல்லது என எண்ணுவதற்கில்லை. முடியுமோ என்று திட்டவட்டமாய்க் கூற முடியாது. 3. சிந்துவெளி முத்திரைகளின்மேல் மக்களின் இடுகுறிப் பெயர்களும், சிறப்புப் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. இப் பெயர்களைத் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகளிலும், சங்கச் செய்யுள்களிலும், பதிகங்களிலும் காணலாம். இவ் வொருமைப்பாட்டை ஒப்புக்கொள்ளும் முன்னர்ச் சிந்து வெளிப் பெயர்களைப் பற்றிய விளக்கம் பொருத்தமானதுதானா என்பதை நாம் ஆராய்ந்தறிய வேண்டும். சிந்துவெளி எழுத்தாராய்ச்சியானது இன்னும் தொடக்கநிலையிலேயே நிற்கின்றது. ஆகவே, திரு. மகாதேவன் கொண்டுள்ள இம்முடிவை ஓர் ஊகமாகவே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். 4. சிந்துவெளி அரசியலும், பழந்தமிழர் அரசியலும் ஆகிய இரண்டுமே மிகத் திறம்பட நடைபெற்றுவந்தன. இஃதும் சிறப்பானதோர் ஒற்றுமையாகும். திரு. மகாதேவன் காணும் இவ் வியைபில் தெளிவு இல்லை. முற்பட்டு நிலவி மறைந்தொழிந்ததொரு நாகரிகச் சின்னங்களுடன் பிற்காலத்து வழங்கிய நாகரிகம் ஒன்றன் சின்னங்களை ஒப்பிட்டு உண்மை நாடுவது ஆராய்ச்சி விதிகளுக்கு முரண்பாடாகும். 5. சிந்துவெளி முத்திரைகளின்மேல் காணப்படும் சில குறிகள் ஒருவருடைய பெயருக்கு முன்பு இணைந்துவரும் அவருடைய ஊரைத் தெரிவிப்பதாக இருக்கலாம். சங்க கால இலக்கியத்திலும், பிற்பட்ட இலக்கியங்களிலும் மக்கள் பெயர்கட்கு முன்பு அவர்களுடைய ஊரின் பெயர் இணைந்துவருவது உண்மைதான். சிந்துவெளி எழுத்துகளில் ‘நகரம்’ என்பதைக் குறிப்பிடும் குறியீடுகளானவை ‘நகரம்’ என்ற பெயரைக் காட்டும் எழுத்துச் சித்திரங்களைப் போலவே தோற்றுகின்றன. தம் பெயர்களுக்கு முன்பு தாம் பிறந்த ஊரின் பெயரை இணைத்துக்கொள்ளும் மரபு சிந்துவெளி மக்களுக்கும் |