பக்கம் எண் :

சிந்துவெளி அகழ்வாராய்ச்சி 45

சங்ககாலத் தமிழ் மக்களுக்கும் பொதுவான தொன்றாகத்தான்
காணப்படுகின்றது. எனினும், மேலும் திட்டமான சான்றுகளைக் கொண்டுதான்
இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும். சிந்துவெளி எழுத்துக்களை மேலும்,
பலர் ஆராய்ந்து வருகின்றனர். தாம்தாம் ஆராய்ந்தறிந்தவாறு குறியீடுகளுக்கு
அவர்கள் விளக்கம் தந்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு குறியீட்டுக்குப் பல
பொருள்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. அவ்வாய்வாளர்களிடையே ஏதும்
உடன்பாடு தோன்றவில்லை. எடுத்துக்காட்டாக, சிந்துவெளி எழுத்துக்களில்
அடிக்கடி ஒரு குறி வருகின்றது, மூடியில்லாத ஒரு பாண்டம் போல அது
தோற்றுகின்றது. அக் குறி அரசமரத்தைக் குறிப்பிடுகின்றதென ரஷிய ஆய்வுக்
குழுவினர் கூறுவர்; அது மரக்கலம் ஒன்றைக் குறிப்பிடுவதாகப் பின்லாந்து
ஆய்வாளர் கூறுகின்றார் ; அது வேற்றுமை உருபு ஒன்றைக்
குறிப்பிடுகின்றதென லாங்டன் என்பார் கருதுகின்றார். அதை எகிப்திய,
சுமேரிய எழுத்துகளுடன் ஒப்புநோக்கி அது கைப்பிடிகளையும், மூக்கையும்
கொண்ட சாடி ஒன்றைக் காட்டுகிறதென்று ஹன்டர் என்ற அறிஞர்
எண்ணுகின்றார். இவருக்கு மாறாகக் கைப்பிடிகளையும் மூக்கையும் கொண்டு
அடி குவிந்த பாண்டம் ஒன்றை இக் குறி அறிவிப்பதாகத் திரு. மகாதேவன்
அவர்களே கருதுகின்றார். ஆகவே, சிந்துவெளிக் குறியெழுத்துக்களைப் பற்றிய
விளக்கம் எதையும் ஐயப்பாடின்றி ஏற்றுக்கொள்ளாத நிலையில் நாம் இன்று
உள்ளோம்.

     6. பண்டைய சங்க இலக்கியங்களில் கற்பனை செய்யப்பட்டுள்ள
புராணக் கதைகளுக்கும், சிந்துவெளி முத்திரைகளின் மேல் பொறிக்கப்
பட்டுள்ள சித்திரக் காட்சிகள் சிலவற்றுக்கு மிடையே ஓர் ஒற்றுமையைக்
காணலாம்.

     பலமுனைச் சான்றுகளின்றி இதையும் நாம் திட்டவட்டமாய்
ஏற்றுக்கொள்ள வியலவில்லை. மேற்கொண்டு நடைபெற்றுவரும்
ஆராய்ச்சிகளின் வாயிலாக ஒருவேளை இவ் வறிகுறியின் கருத்துக்குச்
சார்பாகப் புதிய சான்றுகள் கிடைக்கக்கூடும்.

     இந்திய அரசாங்கத்தின்கீழ்ப் புதைபொருள் ஆராய்ச்சியில் பணியாற்றி
வரும் திரு. எஸ். ஆர். ராவ் என்பவர் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய
ஆராய்ச்சியிலீடுபட்டுள்ளவர். இவருடைய முயற்சியின் பயனாகக் குசராத்
மாநிலத்தில் புதையுண்டு கிடந்த லோதால் என்ற பழந் துறைமுகப்பட்டினம்
ஒன்று வெளியாறிற்று. அந் நகரத்து நாகரிகமும் மொகஞ்சதாரோ நாகரிகமும்
நெருங்கிய தொடர்பு உடையன என்று அவர் கருதுகின்றார்.