பக்கம் எண் :

46தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

சிந்துவெளி நாகரிகம் குசராத் கடற்கரை வரையில் பரவியிருந்ததென்ற
அரியதொரு உண்மையை வெளியாக்கிய பெருமை இவரைச் சாரும்.
சிந்துவெளி எழுத்துகளை இவரும் ஆராய்ந்து ஒரு கருத்தை
வெளியிட்டுள்ளார். சிந்துவெளி மக்கள் தம் மொழியில் தொடக்கத்தில்
ஏறக்குறைய முந்நூறு குறிகளையே கையாண்டு வந்தனர் என்றும், எனினும்
காலப்போக்கில், அதாவது கி.மு. 1900-1800 ஆண்டளவில், அவற்றுள்
வழக்கொழிந்தன போக, இருபது எழுத்துகளே எஞ்சி நின்றன வென்றும்,
ஒலிக்குறிப்பு அடிப்படையில் சிந்துவெளி எழுத்துகள் இந்தோ-ஐரோப்பிய
மொழிக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ளனவே யன்றித் திராவிட
மொழிக்கும் அவற்றுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்றும் அவர்
கருதுகின்றார். இதுவரை சிந்துவெளி நாகரிகத்தைப்பற்றிய ஆராய்ச்சியில்
ஈடுபட்டிருந்த அறிஞர்கள் அனைவரும் அந் நாகரிகத்துக்கும் பழந் தமிழர்
நாகரிகத்துக்கும் இடையே ஓரளவு இணக்கத்தையே உருவாக்கி வந்துள்ளனர்.
இதற்கு முற்றிலும் மாறுபாடாகக் காணப்படுகின்றது திரு.ராவ் அவர்களின்
கொள்கை. மிக அண்மையில் இவருடைய கருத்து வெளிவந்துள்ளதாகையால்
அதைப்பற்றி மேலும் ஆழ்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
தற்போது இவர் இவ்வாராய்ச்சியில் தொடர்ந்து ஈடு பட்டுள்ளார்.

     சிந்துவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகத்துடன் வேறு சிலரும்
ஒப்பிட்டுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் மிகப் பழங்கால வேதமொழி
எழுத்துகளுடன் தொடர்புடையன என்றும், களிமண் முத்திரைகளின்மேல்
காணப்படும், விலங்குகளின் வடிவங்கள் ஆரியரின் வேள்விகளையும்
அவற்றில்  பலியிடப்பட்ட விலங்குகளையும் குறிப்பன என்றும் சிலர்
கருதுகின்றனர். ஆரியர்கள் வேள்விகளில் பசுக்களையும் ஆடுகளையும்
பலியிடுவது வழக்கம். ஆனால், மொகஞ்சதாரோ முத்திரைகளின் மேல்
யானையின் உருவங்களும், காண்டாமிருகங்களின் உருவங்களும்
பொறிக்கப்பட்டுள்ளன. எக்காலத்திலும் இவ் விலங்குகள் ஆரியரின்
வேள்விகளில் பலியானதில்லை. எனவே, மொகஞ்சதாரோ மொழியுடன் ஆரிய
மொழி எவ் விதத்திலும் தொடர்புடையதன்று என்று கொள்ளலாம்.

     இதுவரையில் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு கி. மு. 1200
ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் ஆரிய நாகரிகம் தோன்றியிருக்க
முடியாது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டுள்ள முடிபாகும். இருக்கு
அதர்வண