வேதங்களில் காணப்படும் இலக்கிய அமைப்பைக் கொண்டும் புதைபொருள் சான்றுகளைக் கொண்டும் ஆரிய நாகரிகமானது கி.மு. 1100-1000 ஆண்டுகளில் தோன்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். சிந்துவெளி நாகரிகம் மறைவுக்கும் இந்திய நாட்டுக்குள் ஆரியர் நுழைந்ததற்கும் இடையில் பல நூற்றாண்டுகள் கழிந்து போயினவாதலின் சிந்துவெளி நாகரிகத்தை ஆரியரின் நாகரிகமாகக் கொள்ளலாகாது. மேலும், ஆரிய நாகரிகம் நாட்டுப்புறத்தோடு ஒன்றி வளர்ந்து வந்துள்ளது. ஆனால், சிந்துவெளி மக்கள் பெரிய பெரிய நகரங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் ; அவர்களுடைய நாகரிகம் நகர்ப்புறத்து நாகரிகமாகும். மொகஞ்சதாரோ முழுவதும் செங்கல்லால் கட்டப்பட்டதொரு நகரமாகக் காட்சியளிக்கின்றது. அதன் அழகிய தெருக்கள் யாவும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. சொக்கட்டான் கோடுகளைப் போல அவை நேர் நேராக ஓடுகின்றன. நகரத்தின் சுற்றளவு சுமார் 3, 4 கி.மீ. இருக்கும். கடல் போல விரிந்தோடிய சிந்து நதிக்கரையின் மேல் அந்நகரம் அமைந்திருந்தது. நாட்டுப் புறங்களில் சிற்றூர்களில் வாழ்ந்து வந்த ஆரியரின் பொலிவற்ற நாகரிகத்துக்கும், திகைப்பூட்டும் வாழ்க்கை வசதிகள் பலவும் வாய்க்கப்பெற்ற மிகப் பெரும் நகரங்களில் வாழ்ந்துவந்த சிந்துவெளி மக்கள் வளர்த்திருந்த நாகரிகத்துக்கும் இடையே எவ்வளவு வேறுபாடு ! இஃதன்றி, சிந்துவெளிச் சிதைவுகளில் இலிங்க உருவங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி மக்கள் இலிங்க வழிபாடு உடையவர்கள் என இதனால் விளங்குகின்றது. ஆனால், இருக்கு வேதகால ஆரியர்கள் இலிங்க வழிபாட்டை எள்ளிப் புறக்கணித்தார்கள். இலிங்கத்தை வழிபட்டவர்களும், அதைப் பழித்துப் பாடியவர்களும் ஒரே இனத்தவராவர் என்று கூற முடியாது. வேதகால ஆரியர்கள் சிந்து வெளியில் வாழ்ந்தவர்களாக இருந்து பிறகு கங்கை வெளியில் பரவிக் குடியேறியிருப்பார்களாயின் சிந்துவெளிச் சின்னங்களான எழுத்து முத்திரைகளையும், செப்பேடுகளையும் பொறிக்கும் வழக்கத்தையும் தம்முடனே கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், வேதகால நாகரிகத்தில் இவ்விரண்டும் காணப்படவில்லை. மேலும், சிந்துவெளி மனிதனின் தலையின் வடிவ அமைப்புக்கும் ஆரியனின் தலையின் வடிவ அமைப்புக்கும் எவ்விதமான இயைபும் காணப்படாதது குறிப்பிடத்தக்கதாகும். ஆரிய |