வடிவத்துக்கு முற்றிலும் முரணாகச் சிந்துவெளி மனிதனின் நெற்றியின்மேல் புருவம் ஏறியிருக்கின்றது. அவனுடைய உதடுகள் தடித்துப் பிதுங்கியுள்ளன. மொகஞ்சதாரோ களிமண் முத்திரைகளின்மேல் பசுபதி என்ற உருவில் சிவன் வடிவமும், அம்மன் வடிவமும் மிகச் சிறப்பாக இடம் பெறுகின்றன. ஆனால், இருக்கு வேதக் கடவுளருள் ஒருவரான உருத்திரன் முழு முதற்கடவுளராக ஆரியரால் ஏற்கப்படவில்லை. உருத்திரன் ‘ரௌத்திராகாரத்தில்’ இருப்பதாக இருக்கு வேதம் பேசுகின்றது. ஆனால், சிந்துவெளிப் பசுபதியோ அமைதியாக யோகமுத்திரையுடன் அமர்ந்து காட்சியளிக்கின்றார். சிந்துவெளி மக்கள் பின்பற்றி வந்த சமயமானது கோள்கள், விண்மீன்கள் ஆகிய வான மண்டலங்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. அவர்கள் வானவியலையும் சோதிட நூலையும் பயின்றவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கையில் இவை சிறப்பிடம் பெறுகின்றன. அவர்களுடைய பெயர்களுடன் விண்மீன்களின் பெயர்களும் இணைந்திருந்தன. இக் கூறுபாடுகள் அனைத்தும் வேதகால ஆரியருக்குப் புறம்பானவையாம். ஆதி ஆரிய நாகரிகத்தில் வானவியலும் சோதிடமும் இடம் பெற்றில. பிற்கால ஆரியர்கள் பிற நாகரிகங்களிலிருந்து பல கருத்துகளையும், சொற்களையும் ஏற்றுக் கொண்டனர். பறவைகளையும் விலங்குகளையும் தொடர்புறுத்தும் வழக்கம் ஆதி ஆரியரிடமும் காண முடியாது. அஃது அவர்களுடைய சமயத்தில் பிற்காலத்திற்றான் நுழைவுற்றது. விநாயகக் கடவுளின் பெருச்சாளியும், சிவபெருமானின் எருதும், துர்க்கையின் சிங்கமும், முருகக் கடவுளின் மயிலும், திருமாலின் கருடனும் ஆரியர்கள் தமிழரிடமிருந்து ஏற்றுக் கொண்டவையாம். அரசமரத்தைக் குறிக்கும் ‘அசுவத்தம்’ என்னும் சொல் சிந்துவெளி மக்களிடமிருந்து ஆரியத்தில் புகுந்ததாகும். ‘பூஜை’ என்னும் சொல் அனாரியச் சொல் என்றும், பூ-செய் என்னும் தமிழ்ச் சொற்றொடர் ஆரியத்தில் பூஜை என மருவி பூஜா எனவாயிற்றென்றும் சுநீத்குமார் சாட்டர்ஜி கூறுவார். சிந்துவெளி நாகரிகமும் நகரங்களும் எக்காரணத்தாலோ மறைந்தொழிந்தபின்னர், சிந்துவெளி மக்களுள் ஒருசாரார் கங்கை வெளியில் பரவிக் குடியேறி இருக்கக்கூடும். வேறு பலர் கூட்டங் கூட்டமாகத் தெற்கு நோக்கி வந்து தக்காணத்திலும், தமிழகத்திலும் தங்கிவிட்டிருப்பார்கள். வேதங்களில் பாணிகள் என்றொரு குலத்தினர் குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் |