வணிகர்கள் என்றும், வட்டிமேல் வட்டியிட்டு வாங்குபவர்கள் என்றும் வேதங்கள் கூறும். இப்பாணிகட்கு வேள்விகளில் ஈடுபாடு கிடையாது ; ஆரியக் கடவுளரையும் இவர்கள் வணங்குவதில்லை. ஆரியருக்கும் பாணிகளுக்குமிடையே அடிக்கடி பூசல்கள் நேர்வதுண்டு. பாணிகளின் குடியிருப்புகள் மேல் ஆரியர்கள் படையெடுத்துச் சென்றதாகவும், அதற்காகப் பாணிகள் அவர்கள்மேல் பழிதீர்த்துக் கொண்டனர் என்றும் இருக்கு வேத சுலோகம் ஒன்று தெரிவிக்கின்றது. கங்கை வெளியில் வந்து குடியேறிய சிந்துவெளி மக்களே இப்பாணிகள் என ஊகித்தற்கிடமுண்டு. அவர்களுடன் மூண்ட பூசல்களையும் போர்களையும் பாராட்டாமல், அவர்களுடைய சமயக் கோட்பாடுகளை மட்டும் ஆரியர்கள் ஏற்றுக் கொண்டனர் போலும். சிந்துவெளிக் கடவுளாகிய பசுபதியை ஆரியர்கள் தம் உருத்திரன் நிலையைவிட மேல்நிலைக்கு ஏற்றினார்கள். யோக முத்திரைகளும், சக்தி வழிபாடும், அரச மரமும் ஆரிய சமயத்தில் இடம் பெற்றுவிட்டன. தம் சமயத்திலும் மொழியிலும் தாம் மீனுக்குக் கொடுத்திருந்த சிறப்பைச் சிந்துவெளி மக்கள் தக்கணத்திலும் தமிழகத்திலும் குடியேறிய பிறகும் மறந்துவிடவில்லை. தமிழ் மொழியிலும் மீனுக்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. தென் பாண்டி நாட்டு மன்னரின் கொடி மீனக்கொடி. விண்ணில் மின்னுவது மீன். தமிழ்ப் பெண்களின் கண்களுக்கு ஒப்பாவது மீன். மதுரையின் கடவுள் பெயர் மீனாட்சி என்பதாகும். சிந்துவெளி மக்கள் அனைவரும் ஒருங்கு திரண்டு ஒரே காலத்தில் இடம் பெயரத் தொடங்கித் தென்னிந்தியாவுக்கு வந்து குடியேறினர் என்று கொள்ளுவதற்கில்லை. அவர்கள் பல்வேறு குழுக்களாகப் பல காலங்களில், பலவழிகளில் தனித் தனியாகத் தென்னிந்தியாவுக்கு வந்து குடியமர்ந்தனர். மத்தியதரைக் கடற்பகுதி மக்களும், சிந்துவெளி மக்களைப் போலவே பல தொகுதியாகப் பல காலங்களில் தென்னிந்தியாவுக்கு வந்து குடியேறிவர்கள்தாம். அவர்கள் வடமேற்கு இந்தியா, சிந்துவெளி, கங்கைவெளி ஆகியவற்றின் வழியாகத் தான் தமிழகத்துக்கு வந்தார்கள் என்று கொள்ளமுடியாது. சிலர் அவ்விதம் வந்திருக்கலாம். அவர்களுள் ஒருசாரார் கடல் கடந்து வந்து தமிழகத்தின் மேலைக்கடற்கரையில் குடியேறினர் எனக் கருதலாம். பொதுவாக சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழருக்கும் தொடர்பு இருந்ததெனவே கருதலாம். |