பக்கம் எண் :

50

                   5. பண்டைய தமிழரின்
                  அயல்நாட்டுத் தொடர்புகள்


     ‘திரைகட லோடியுந் திரவியம் தேடு’ என்பது ஒரு மூதுரை. காலத்தால்
பிற்பட்டதாயினும் பழந்தமிழரின் வாழ்க்கைப் பண்பாடுகளுள் ஒன்றை இது
தெற்றென விளக்குகின்றது. பண்டைத் தமிழர்கள் சோம்பித் திரிந்தவர்கள்
அல்லர் ; உழைத்து உழைத்து வாழ்க்கையில் இன்பங் காணுவதிலேயே
கண்ணுங்கருத்துமாய் விளங்கியவர்கள். அவர்கள் மலைகளுடனும்,
காடுகளுடனும், கடலுடனும் கலந்து உறவாடினார்கள். மேற்கே கிரீஸ், ரோம்,
எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடலோடிப் பிழைத்தார்கள். எகிப்து,
பாலஸ்தீனம், மெசப்பொடோமியா, பாபிலோனியா ஆகிய நாடுகளுடன்
பண்டைய தமிழகர்கள் வாணிகத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.
தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றுக்கு
மேற்காசிய நாடுகளில் பண்டைய நாள்களிலேயே வேட்கையுண்டு. யூதர்களின்
ஆதி சமயத் தலைவரான மோசஸ் என்பார் தாம் நிகழ்த்தி வந்த இறை
வழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினார் எனப் ‘பழைய ஏற்பாடு’
கூறுகின்றது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்தது கி.மு.1490-ல் என்பர்.
தென் அராபிய நாட்டு அரசி ஷேபா என்பாள் [இஸ்ரேலின் மன்னன்
சாலமனைக் காணச் சென்றபோது ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப்
பண்டங்களைக் கையுறையாகக் கொண்டு போனதாகவும் பழைய ஏற்பாட்டில்
ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. சாலமன் ஆண்ட காலம் கி.மு. 1000 என்று
அறுதியிட்டுள்ளனர். இவருடைய காலத்தில் டயர் நாட்டு மன்னர் ஹீராம்
என்பாரின் ஏவலின்கீழ் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சில மரக்கலங்கள் கீழை
நாடுகளுக்குப் பாய்விரித்தோடிப் பொன், வெள்ளி, தந்தம், குரங்குகள், துகிம்
(தோகை அதாவது மயில் தோகை), ஆல்மக் (அகில் மரங்கள்), விலையுயர்ந்த
இரத்தினங்கள் ஆகிய சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்தனவாம். சாலமன்
மன்னனுக்கு அளிக்கப்பெற்ற மதிப்பிறந்த இப் பண்டங்களின்