பக்கம் எண் :

பண்டைய தமிழரின் அயல்நாட்டுத் தொடர்கள் 51

பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்பதில் ஐயமில்லை.
இப் பொருள்கள் அனைத்தும் பண்டைய தமிழகத்தின் சேர நாட்டுத்
துறைமுகங்களினின்றும் ஏற்றுமதியாகியிருக்கவேண்டும்.

     தமிழகத்துக்கும் பாபிலோனியாவுக்குமிடையே மிக விரிவான வாணிகம்
நடைபெற்று வந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. பாபிலோனியாவில்
நிப்பூர் என்ற இடத்தில் முரஷு என்பவரும் அவர் மக்களும் நடத்தி வந்த
காசு வாணிகத்தில் கணக்குப் பதியப்பட்ட கணிமண்ணேடுகள் சிலவற்றில்
பாபிலோனியர் தமிழக வணிகருடன் கொண்டிருந்த பற்று வரவுகள்
குறிக்கப்பட்டுள்ளன. அதே காலத்தில் தமிழ் வணிகர்கள் பாபிலோன்
நகரத்தில் குடியேறி அங்கேயே தங்கித் தம் தொழிலை நடத்தி வந்ததற்கும்
இவ்வேடுகள் சான்று பகர்கின்றன.

     தமிழகத்துக்கும் எகிப்துக்குமிடையே ஏற்பட்டிருந்த வாணிகத் தொடர்பு
மிகப் பழமையானதாகும். அது எப்போது தொடங்கியிருக்கும் என்னும்
கேள்விக்குப் பலவாறான விடைகள் அளிக்கப்படுகின்றன. பல
நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ‘எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ்’
(Periplus of the Erithraean Sea) என்னும் நூலை டபிள்யூ. எச். ஸ்காபி
என்பார் பதிப்பித்துள்ளார். தம் பதிப்புரையில் அவ்வாசிரியர் ‘கிரேக்க மக்கள்
அநாகரிகத்தினின்றும் விழித்தெழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே
எகிப்தும் பண்டைய இந்திய நாடுகளும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தன.
பாரசீக வளைகுடாவின் வடபால் இந்நாடுகள் ஒன்றோடொன்று பண்டமாற்றுச்
செய்து கொண்டன’ என்று கூறுகின்றார். பண்டைய தமிழகத்திலிருந்து
ஏற்றுமதியான பண்டங்களுள் சிறப்பானவை மஸ்லின் துணியும், ஏலம்,
இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களுமாம். தமிழக வணிகர்கள் இச்
சரக்குகளை மரக்கலங்களில் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடாவுக்கு
இருபுறமுள்ள துறைமுகங்களில் இறக்கினர். பினீஷியர் அல்லது அராபியர்
அச்சரக்குகளை அவ்விடங்களில் தம் வசம் ஏற்றுக் கொண்டு எகிப்துக்கு
எடுத்துச் சென்றனர். எகிப்தின் பதினேழாம் அரசு பரம்பரையினர் காலத்தில்
(கி.மு. 1500-1350) அந் நாட்டில் இறக்குமதியான சரக்குகள் பல தந்தத்தினால்
கடையப் பட்டவை என அறிகின்றோம். இவற்றில் சில
தென்னிந்தியாவினின்றுதான் ஏற்றுமதியாயிருக்கவேண்டும்.
தென்னிந்தியாவுக்கும் சுமேரியாவுக்குமிடையில் கி.மு. நாலாயிரம்
ஆண்டுகளுக்கு